காவடி, அலகு குத்தி வரும் பக்தர்களுக்கு நேரடி தரிசனம் வாய்ப்பு - திருச்செந்தூர் செந்திலாண்டவர் பக்தர்கள் கோரிக்கை

Thiruchendur Murugan

காவடி, அலகு குத்தி வரும் பக்தர்களுக்கு நேரடி தரிசனம் வாய்ப்பு - திருச்செந்தூர் செந்திலாண்டவர் பக்தர்கள் கோரிக்கை

ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் திருக்கோயிலுக்கு, விஷேச நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து செல்கின்றனர்.

வைகாசி விசாகம், மாசித்திருவிழா, தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கிருத்திகை உள்ளிட்ட விஷேச காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு (வேல்) குத்தியும், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

முருகன் மீதான தீவிர பக்தி, விரதம், துன்பங்களை தாங்கி நடைபயணம் செய்து வரும் இப்பக்தர்கள், கோயிலுக்கு வந்த பின் காவடியை இறக்கி, அலகு எடுத்த பிறகு, மற்ற சாதாரண பக்தர்கள் மற்றும் முதியோர் பக்தர்கள் வரிசையில் நின்றே தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலையில், பொதுத் தரிசன வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் காணப்படுவதால், உடல் சோர்வு, காயங்கள், சிரமங்கள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். குறிப்பாக வயதானவர்கள், நீண்ட பாதயாத்திரையில் வந்தவர்கள், அலகு குத்திய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, காவடி எடுத்து வரும் மற்றும் அலகு குத்தி வரும் பக்தர்களை தனி வழித்தடம் மூலம் நேரடியாக உள்ளே அனுப்பி முருகப்பெருமானை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று திருச்செந்தூர் செந்திலாண்டவர் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம், மருத்துவ உதவி, நிழற்குடில், வரிசை ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில் நிர்வாகம், இந்த கோரிக்கையையும் பரிசீலனை செய்து, காவடி மற்றும் அலகு குத்தி வரும் பக்தர்களுக்கென தனி தரிசன ஏற்பாடு செய்தால், அது பக்தர்களுக்கு பெரும் ஆறுதலாகவும், கோயில் ஒழுங்குமுறைக்கும் உதவியாகவும் இருக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டும், இத்தகைய சிறப்பு தரிசன வசதி அமல்படுத்தப்பட வேண்டும் என திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் பக்தர்கள் சார்பில் நடுநிலை.காம் மூலம் கோரிக்கை வைக்கப்படுகிறது.