திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

Thiruchendur Murugan

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்னும் சில மணி நேரத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உலக பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா கடந்த 22ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூரில் குவிந்துள்ள பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். விழா நாட்களில் தினமும் யாக சாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியதும், பூஜைகள் துவங்கி நடந்தது. 

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முக விலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலையில் 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபரதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. 

பின்னர் மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாரதனை நடந்தது. காலை 7:00 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளியதும், யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்தது. காலை 9 மணிக்கு நிவாரதனை அதைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாரதனையை தொடர்ந்து சஷ்டி தீவிரனை நடைபெற்றது. யாகசாலையில் சுவாமி அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கு சப்ரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் சுவாஜெயந்திநாதர் எழுந்தருளி அங்கு சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடக்கிறது. 

மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்துள்ளனர். சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு பின்னர் கடற்கரை சந்தோஷ் மண்டபத்தில் சுவாமி அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் கிரிப் பிரகார உலா வந்து கோயிலை சேர்கிறார். அங்கு 108 மகா தேவர் சன்னதி முன் சுவாமிக்கு சாயாபிஷேகம் நடக்கிறது. 

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரையில் பத்து வாட்சிங் டவர் அமைக்கப்பட்டுள்ளது. 10 எல்இடி திரைகள் மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் நேரலையில் காண்பிக்கப்படுகிறது. 7ஆம் திருவிழாவான நாளை அதிகாலை 9 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3:30 மணிக்கு விஸ்வரூபம் தீபாராதனை ஐந்து முப்பது மணி அளவில் தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். மாலை 6 மணி அளவில் அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை மாற்ற நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.