கோர்ட் உத்தரவு மீறல் எதிரொலி - சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு
Thiruvannamalai news
தமிழக அரசு நிர்வாகம் கோர்ட் உத்தரவை மீறியதை தொடர்ந்து சிஐஎஸ்எப் போலீசார் பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடியகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று(டிச.,03) 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ' அண்ணாமலையாருக்கு அரோகரா ' என பக்தி பரவசத்துடன் கண்டு வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கடந்த, 24ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று 3ம் தேதி, முக்கிய விழாவான பஞ்ச பூதங்கள், 'ஏகன் - அனேகன்' என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பிறகு 'அனேகன் - ஏகன்' என்பதை விளக்கும் வகையில், மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட்டது. முன்னதாக, மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் மஹா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய் மற்றும், 1,150 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டன.
விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னிதி முழுதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி, அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், கோயில் வளாகம் முழுதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் தீபம் ஏற்றாத நிலையில், ஹிந்து அமைப்பினருக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது; பதட்டமான சூழல் நிலவுகிறது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் 10 பேருடன் சென்று திருப்பரங்குன்றம் மலையில் உடன் சென்று தீபத்தூரில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனவும், சிஐஎஸ்எப் போலீசார் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிச.,3) நடைபெறுகிறது. இங்கு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பக்தர்கள் விரும்பினர். ஆனால், மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் 1920 ம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு முன்னெடுத்தது.
மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார். இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என உத்தரவிட்டு இருந்தார்.
இதனை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கு ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனையடுத்து, தனி நீதிபதி உத்தரவு அடிப்படையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி மலை உச்சியில் கார்த்திகை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இது பக்தர்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் பிற பகுதிகளை போல பழைய தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவை நிறைவேற்றவில்லை என மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் நீதிமன்ற உத்தரவுபடி இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லையெனில் மாலை 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார். ஆனால், கார்த்திகை தீபம் ஏற்றப்படாத நிலையில், மனுதாரர் மற்றும் 10 பேர் உடன் சென்று தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். உடன் சி .ஐ. எஸ் .எப் .போலீசார் பாதுகாப்புக்காகச் செல்ல வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை என்பதால் கோவில் முன் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு திரண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினர் மலை உச்சிக்கு செல்ல முயன்றனர். தடுத்த போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
nadunilai.com