தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் விட்ட இடத்தில் இருந்து தொடரும் - தேர்தல் அலுவலர் தகவல்
CSI News
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் விட்ட இடத்தில் இருந்து தொடரும் என்று தேர்தல் அலுவலரும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியுமான ஜான் ஆர்.டி.சந்தோசம் தெரிவித்தார்.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகளின் பதவி காலம் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்ததையொட்டி, திருமண்டலத்தின் நிர்வாகத்தையும், திருமண்டல தேர்தலை நடத்திடவும், உயர்நீதிமன்றம் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகியாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணியை நியமித்தது. இதனையடுத்து நீதிபதி ஜோதிமணி தலைமையிலான நிர்வாகிகள் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை கவனித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி திருமண்டல தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டனர். முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்குரிய வாக்காளர் பட்டியல் அந்தந்த சபைகளில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இறுதி வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டு திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள்(டிசி), சேகர மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது. மனுக்கள் பரிசீலனை முடிந்து பல்வேறு சேகரங்களில் பெருமன்ற உறுப்பினர்கள் பலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், சி.எஸ்.ஐ சினாடு நிர்வாகமே தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்திற்கு பொறுப்பு பேராயராக ஆந்திர மாநிலம் ராயலசீமா திருமண்டலத்தை சேர்ந்த பேராயர் ஐசக் வரபிரசாத் நியமிக்கபட்டார். நிர்வாக செயலாளராக நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையிலான கமிட்டியையும் சினாடு நியமித்தது. திருமண்டல பொறுப்பு பேராயராக கடந்த மாதம் 5ம் தேதி பொறுப்பேற்ற ஐசக் வரபிரசாத், 7ம் தேதி நடைபெறுவதாக இருந்த திருமண்டல தேர்தலை ஒத்தி வைப்பதாகவும், மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார். இதனால் திருமண்டல தேர்தல் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திருமண்டல தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அருள்மேயர் உள்ளிட்ட சிலர், சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் அவர்கள் நீதிபதி ஜோதிமணி தலைமையிலான நிர்வாகிகள் முதல்கட்ட தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் முடித்துவிட்டனர். தேர்தலை ரத்து செய்வதால் எங்களை போன்றவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தேர்தல் பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தனர். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு கண்டு கொள்ளலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. அதன்பேரில் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 27ம் தேதி வழங்கிய தீர்ப்பில், தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தொடரவும், தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டதோடு,சினாடு பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் கூறினார். இதனையடுத்து இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி ஏற்கனவே நியமித்திருந்த தேர்தல் அலுவலர்களான மாவட்ட நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம், வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகர் ஆகியோர் திருமண்டல அலுவலகத்தில் தேர்தல் பணியை உடனடியாக தொடங்கினர்.
இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரான ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம் கூறுகையில்,உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி அறிவுறுத்தலோடு நாங்கள் தேர்தல் பணியை விட்ட இடத்தில் இருந்து நடத்த உள்ளோம். கடந்த 3.9.2025 அன்று இருந்த நிலையே தொடரும் என்றார்.
nadunilai.com