நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக எதையும் செய்வோம் - அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

Minister jeyakumar

நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக எதையும் செய்வோம் -  அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

சென்னை,ஜன.3:

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, அமைதி மற்றும் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக எதைச் செய்ய வேண்டுமோ, அதை எந்த தயக்கமும் இன்றி இந்தியா மேற்கொள்ளும் என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி., கிண்டியில், சென்னை கல்வி மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘சென்னை ஐ.ஐ.டி. – குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன்’ அமைப்பை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் விரிவாக பதிலளித்தார்.

மேற்கு நாடுகளின் பார்வை மாற்றப்பட வேண்டும்

அப்போது பேசிய அமைச்சர்,“மேற்கு நாடுகளில் இந்தியாவை குறித்து சில தவறான புரிதல்கள் உள்ளன. அவற்றை மாற்ற, நாம் தொடர்ந்து தெளிவாகவும், நேர்மையாகவும் உரையாட வேண்டும். உலகில் சில நாடுகளுக்கே பழமையான நாகரிகங்கள் இருந்தன. அவை இப்போது நவீன வளர்ச்சியையும் அடைந்துள்ளன. அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை பெருமையுடன் பேசுகின்றனர். அதேபோல், நாமும் நம் பழமையை மதிக்க வேண்டும். ஆனால் அதிலேயே நின்றுவிடக் கூடாது. நவீனத்தையும் இணைத்தால்தான் உலகம் நம்மை மதிக்கும்” என்றார்.

‘வசுதைவ குடும்பகம்’ – இந்திய வெளிநாட்டு கொள்கையின் அடிப்படை

மேலும்,“இந்த உலகில் எந்த நாடும் தனித்து இயங்க முடியாது. மேற்கு நாடுகளை நாம் ஒதுக்கவோ, வெறுக்கவோ முடியாது. அவர்களுடன் கூட்டாண்மை அவசியம். இதைத்தான் நம் முன்னோர் ‘வசுதைவ குடும்பகம்’ என்று சொன்னார்கள். ஒவ்வொரு நாடும் உள்நாட்டில் வளர்வதுடன், வெளிநாடுகளுடனும் உறவை வலுப்படுத்த வேண்டும். அண்டை நாடுகளை அரவணைத்து, அவர்களுடன் இணைந்து வளர்வதே இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை மற்றும் ராஜதந்திரம்” என ஜெய்சங்கர் கூறினார்.

அண்டை நாடுகளுடன் நட்பு – ஆனால் எல்லை உண்டு

இந்தியா வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்பு மற்றும் உறவை பேணிவருவதாக குறிப்பிட்ட அவர்,“இயற்கை பேரிடர்கள் நேரிடும் போது, அந்த நாடுகளுக்கு முதல் ஆளாக உதவுவது இந்தியாதான். அந்த உதவியை அவர்கள் மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

ஒரு அண்டை நாட்டுக்கு, பல ஆண்டுகளாக குடிநீரை பகிர்ந்து வந்தோம். ஆனால் அந்த நாடு, பதிலுக்கு பயங்கரவாதத்தை பகிர்ந்தது. நல்ல எண்ணமும், விரோத எண்ணமும் ஒருசேர இயங்க முடியாது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை நாம்தான் முடிவு செய்வோம்; பிறர் அல்ல” எனக் கடுமையாக சுட்டிக்காட்டினார். மேலும், “நம் மக்களின் பாதுகாப்புக்கும், நாட்டின் அமைதிக்குமான எந்த நடவடிக்கையும் எடுக்க இந்தியா தயங்காது. இதுதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு” என அமைச்சர் தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் அங்கம்

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பாஸ்போர்ட்டை சீனா அபகரித்து அவமதித்த சம்பவத்தை குறிப்பிட்ட அவர்,“இதுபோன்ற அவமானங்களை இந்தியா ஒருபோதும் ஏற்க முடியாது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை” என தெளிவுபடுத்தினார்.

கொரோனா காலத்தில் இந்தியாவின் மனிதநேய பங்கு

கொரோனா பெருந்தொற்று காலத்தை நினைவுகூர்ந்த அமைச்சர்,“பல வளர்ந்த நாடுகள், தங்கள் மக்கள்தொகையை விட இரண்டு, மூன்று மடங்கு தடுப்பு மருந்துகளை வைத்திருந்தும், பிற நாடுகளுக்கு உதவவில்லை. ஆனால் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியா, பல நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்துகளை அனுப்பி மனிதநேய உதவி செய்தது” என்றார். 

இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் வி. காமகோடி, அமைச்சர் ஜெய்சங்கருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில்,கலை மற்றும் கலாசார பிரிவு ஆலோசகர் சுஷாந்த குமார் பாணிக்ராஹி,மாணவர் பிரிவு டீன் சத்தியநாராயணன் என். கும்மாடி,சென்னை ஐ.ஐ.டி. – குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் நாராயண்,இணை பாடத்திட்ட ஆலோசகர் முருகையன் அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.