தூத்துக்குடி சாயர்புரம் அருகே வெளிநாட்டினர் பொங்கல் விழா – தமிழர் பாரம்பரியத்தில் திளைத்த 29 பேர்
Pongal
தூத்துக்குடி,ஜன.3:
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 29 வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் “டிராவல் சயின்டிஸ்ட்” என்ற அமைப்பு மூலம் ஆண்டுதோறும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆட்டோ மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து, தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிக மரபுகள், கோவில்கள் குறித்து அறிந்து வருகின்றனர். அதோடு மட்டுமின்றி, ஏழை பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளி கட்டிடங்கள் அமைத்தல், கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தாண்டு, கடந்த 28-ம் தேதி சென்னையில் தொடங்கிய இவர்களின் சுற்றுப்பயணம், பாண்டிச்சேரி, தஞ்சாவூர், மதுரை ஆகிய பகுதிகளை கடந்த பின், இன்று தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள “பிரம்ம ஜோதி” பண்ணை தோட்டத்திற்கு வந்தடைந்தது.
இந்த ஆட்டோ சுற்றுப்பயணக் குழுவில்,இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 13 ஆண்களும்,16 பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். பண்ணை தோட்டத்திற்கு வந்த வெளிநாட்டினருக்கு பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,ஆண்களுக்கு வேஷ்டி, துண்டு,பெண்களுக்கு சேலை, சட்டை வழங்கப்பட்டு,தமிழர்களின் பாரம்பரிய உடை அணிவது மற்றும் பொங்கல் வைப்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பின்னர், வேஷ்டி, துண்டு, சேலை அணிந்து வந்த வெளிநாட்டினர்,மண்பானையில் பனை ஓலை வைத்து, பச்சரிசி, வெல்லம், நெய் சேர்த்து தமிழர்களின் பாரம்பரிய முறையில் சர்க்கரை பொங்கல் வைத்தனர். “பொங்கலோ பொங்கல்” – குலவையுடன் கொண்டாட்டம் பொங்கல் பொங்கி வரும் தருணத்தில், அனைவரும் “பொங்கலோ பொங்கல்” என குலவையிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட பொங்கல்களில் சிறந்த பொங்கல் தேர்வு செய்யப்பட்டது. அதில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு ஜோடி தயாரித்த பொங்கல் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வாழைக்குலை பரிசாக வழங்கப்பட்டது. கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் இந்த ஆட்டோ சுற்றுப்பயணம், ராஜபாளையம் – கன்னியாகுமரி வழியாக சென்று, வரும் 6-ம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைய உள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டினர் கூறுகையில்,“தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை நேரில் அனுபவித்து கொண்டாடியது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. தமிழகத்தை ஆட்டோ மூலம் சுற்றிப் பார்ப்பது ஒரு தனித்துவமான அனுபவமாக உள்ளது. இந்திய மக்கள் மிகவும் அன்பும் பாசமும் கொண்டவர்கள்,”என்றும் தெரிவித்தனர்.
மேலும், இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கிடைக்கும் ஒரு தொகை, ஏழை குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
nadunilai.com