கடலுக்கு போகும் தண்ணீரில் கொஞ்சம் பாசனத்துக்கும் திருப்புங்க ப்ளீஸ் – ஸ்ரீவைகுண்டம் வடகால் விவசாயிகள் குரல்
Thamiraparani
தயவு செய்து கடலுக்கு போகும் தண்ணீரில் கொஞ்சம் பாசனத்துக்கு திருப்புங்கள் என்று ஸ்ரீவைகுண்டம் வடகால் விவசாயிகள் குரல் எழுப்பியுள்ளனர். அதற்கு அதிகாரிகள், “வெள்ள அபாயம், பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று விளக்கம் அளித்து வருகின்றனர்.
தமிழகத்திலேயே தோன்றி, தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரே ஆறு என்றும், ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதி என்றும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு பாயும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என நினைப்பவர்கள் அதிகம். ஆனால் கள நிலை அதற்கு நேர்மாறாக இருப்பதாக ஸ்ரீவைகுண்டம் வடகால் பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாநிலத்தின் நீர் மேலாண்மை குறைபாடுகளால், “குளங்கள் இருக்கிறது… தண்ணீர் இல்லை” என்ற நிலை தொடர்கிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், அதிலிருந்து பிரியும் கண்மாய்கள், குளங்கள் நிரம்புவதில்லை. மழைக்காலங்களில் வரும் நீரை தேக்கி வைத்து, கோடைக்காலம் வரை பயன்படுத்த வேண்டிய திட்டமிடல் இல்லாததே இதற்குக் காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர்.
மழை பெய்தாலே அது முழுவதுமாக கடலுக்கு அனுப்பப்படுவதால், பாசனத்திற்கு பயன்பட வேண்டிய தண்ணீர் வீணாகிறது என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வெள்ளமாக ஓடும் தண்ணீரை “பேரழிவு” எனக் கூறி, அதனை விரைவாக வெளியேற்றுவதிலேயே நிர்வாகம் கவனம் செலுத்துகிறது; ஆனால் தண்ணீர் இல்லாதபோது ஏற்படும் விளைவுகளை யாரும் யோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பு அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்ததை தொடர்ந்து, மழைக்காலத்தில் தண்ணீரை முழுவதுமாக கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் வடகாலில் உள்ள 24 மதகு கண்மாய்களில் பல மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீர் தடையின்றி வெளியேற்றப்பட்டது.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில்,“வடகால் வழியாக வரும் மழை நீரும், புதுக்கோட்டை வழியாக வரும் காட்டுவெள்ளமும் ஒன்றாக சேர்ந்தால் வெள்ள அபாயம் ஏற்படும் சூழ்நிலை இருந்தது. அதனை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பே முதன்மை”என்று தெரிவித்தனர். மேலும்,“வெள்ள அபாயம் ஏற்பட்டு குடியிருப்புகள் பாதிக்கப்பட்டால் பெரிய இழப்பு ஏற்படும். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது”என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் விவசாயிகள் இதனை முழுமையாக ஏற்க மறுக்கின்றனர். எதிர்பார்த்தபடி தொடர் கனமழை பெய்யாததால், தற்போது 24 மதகுகளும் அடைக்கப்பட்டு, இடைப்பட்ட மழை நீர் மட்டும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த நீரையே மக்கள் குளிப்பதற்கும், அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக நீர் நிறம் மாறி, சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வடகாலில் உள்ள பேய்குளம், பொட்டல்குளம் உள்ளிட்ட குளங்களில் தேங்கியுள்ள நீர் தற்போது வற்றிவரும் நிலையில் உள்ளது. இதனால் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு தேவையான நீர் கிடைக்காமல் விவசாயிகள் கடும் பதற்றத்தில் உள்ளனர். இதற்கிடையே, சமீபத்திய மழையால் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக கடலுக்கு அனுப்பப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,“அணைகளின் பாதுகாப்பு, நீர்மட்ட கட்டுப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மட்டுமே நீர் திறப்பு செய்யப்படுகிறது. தேவையை பொறுத்து பாசனத்திற்கான நீர் திறப்பையும் பரிசீலிக்கப்படும்”என்று விளக்கம் அளித்துள்ளனர்.
ஆனால் விவசாயிகள், “மழையை மட்டும் நம்பி இருக்க முடியாது. தாமிரபரணி ஆற்றில் இருந்து ஸ்ரீவைகுண்டம் அணை வழியாக வடகாலுக்கு தேவையான அளவு தண்ணீர் திறந்துவிட்டு, பேய்குளம், பொட்டல்குளம், கோரம்பள்ளம் குளங்களை புதிய தண்ணீரால் நிரப்ப வேண்டும்”என வலியுறுத்துகின்றனர். மேலும்,ஒரு சில நாட்களுக்கு 24 மதகுகளில் சிலவற்றை திறந்து பழைய, அசுத்தமான நீரை கடலுக்கு அனுப்ப வேண்டும். பின்னர் புதிய ஆற்று நீரை வேகமாக அனுப்பி குளங்களை நிரப்ப வேண்டும்.தேவைக்கேற்ப அவ்வப்போது நீர் திறப்பை மேற்கொண்டால் விவசாயமும் பாதுகாக்கப்படும், வெள்ள அபாயமும் தவிர்க்கப்படும் என்ற நடைமுறை தீர்வையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
இதனிடையே,“நீர் மேலாண்மை என்பது வெள்ள காலத்திற்கான பாதுகாப்பு மட்டுமல்ல; வறட்சி காலத்திற்கான தயாரிப்பும் கூட”என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகள், பொதுமக்கள், நீர்வளத் துறை அதிகாரிகள் அனைவரையும் ஒரே மேசையில் அமர வைத்து, தாமிரபரணி நீரை அறிவியல் ரீதியில் நிர்வகிக்க வேண்டிய நேரம் இது என்கிற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
nadunilai.com