போலீஸாரின் அலட்சியத்தால் கஞ்சா ஆசாமிகளிடம் அடி வாங்கிய பாஜக நிர்வாகி !
Police News
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஜே.சுரேஷ். காயல்பட்டினம் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல் செயலாளராக உள்ளார்
கடந்த 4ம் தேதி இரவில் தனது பைக்கிற்கு பெட்ரோல் போடுவதற்காக பங்க் நோக்கி சென்றிருக்கிறார். விநாயகர் கோவில் தெருவில் சென்றபோது, அங்கு நின்ற போலீசார் இவரை வழி மறித்து காயங்களுடன் இருந்த தந்தை, மகன் இரண்டுபேரை இவரது பைக்கில் ஏற்றி அங்குள்ள மருத்துவமனையில் இறக்கி விட்டுவிடும்படி கேட்டுள்ளனர்.
சுரேஷும் அவர்களை தனது பைக்கில் ஏற்றி மருத்துவமனையில் இறக்கிவிட்டு, அவர்களின் சிகிச்சிக்காக உதவியிருக்கிறார். அப்போது அங்கு வந்த அதே கும்பல் காயங்களுடன் இருந்த இருவரையும் மேலும் தாக்க விரட்டியிருக்கிறது. அவர்கள் மருத்துவமனை அறைகளுக்குள் ஓடி சென்று மறைந்து கொள்ள, அவர்களை பைக்கில் ஏற்றி வந்த சுரேஷை கடுமையாக தாக்கியிருக்கிறது. இதில் சுரேஷ் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்களிடம் சுரேஷ், விநாயகர் கோவில் தெருவில் பைக்கில் சென்றபோது, கஞ்சா வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்த இருவரை போலீசார் தனது பைக்கில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்களை தேடி வந்த அந்த கும்பல் மீண்டும் வந்து தாக்கும் போது தன்னையும் தாக்கியதாக தெரிவித்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸாரின் அலட்சியத்தால் கஞ்சா ஆசாமிகளிடம் பாஜக நிர்வாகி அடி வாங்கிய விவகாரம் பாஜக தலைமை வரை கொண்டு செல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக நிர்வாகிகள் பலரும் சிகிச்சை பெற்று வரும் சுரேஷை நேரில் பார்த்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த இருவர்களை பைக்கில் ஏற்றிவிட்ட போலீசார், கூடவே சென்றிருந்தால் இத்தகைய சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதும் பாஜக நிர்வாகிகள் இது குறித்து போராட்டம் நடத்துவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
nadunilai.com