குளத்தூர் பிளஸ் 2 மாணவி கொலையை கண்டித்து மறியல் போராட்டம்

murder news

குளத்தூர் பிளஸ் 2 மாணவி கொலையை கண்டித்து மறியல் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர், வேடநத்தம் ஊரை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகள் பிரதீபா(17). குறுக்குச்சாலையில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 12ம் வகுப்பு படித்துவந்தவர், அதற்கான தேர்வு எழுதி வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலையில் வெளியே காட்டுப்பகுதிக்கு சென்ற மாணவி பிரதீபா வீடுதிரும்பவில்லை. நீண்ட நேரம் அவர் வீடு திரும்பவில்லை என்பதால் அவரை சுப்புராஜ் மற்றும் உறவினர்கள் தேடிபார்த்துவிட்டு குளத்தூர் போலீசில் புகார் கொடுக்க சென்றனர். அங்குள்ளவர்கள் அவர்களை விளாத்திகுளம் போக சொன்னதால் அங்கு போயிருக்கிறார்கள். அங்குள்ளவர்கள் மீண்டும் குளத்தூருக்கே போக சொல்லியிருக்கின்றனர். இப்படி அங்குமிங்கும் உறவினர்கள் அலைந்து கொண்டிருந்த நிலையில் மாணவி பிரதீபா, பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டு காட்டுப் பகுதியில் கிடப்பதாக தகவல் வெளியானது. இத்தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். அப்போது மாணவியின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கூடி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

இந்தநிலையில் இன்று மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கூடிய நிலையில் ஊர் மக்கள் திரண்டு வந்து மருத்துவமனை முன்பாக சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் சொல்லப்பட்டது. இதற்கிடையே பாஜக வடக்கு மாவட்ட நிர்வாகிகள், கட்சியினர் மருத்துவமனை முன்பு கூடி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன் பேட்டியளித்தார்.  அதுபோல் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், கட்சியினர் கூடினர். மறியல் போராட்டம் நடத்தும் நோக்கத்தில் வரும் ஊர் மக்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் சொல்லப்பட்டது.

இதனையறிந்த போலீசார் மருத்துவமனை முன்பு தயாராக இருந்தனர். இந்தநிலையில் வேடநத்தம் கிராமத்தில் உள்ள சில திமுகவினர் முயற்சியால் மாணவியின் உடல் பிரேதபரிசோனைக்கு எடுத்து செல்லப்பட்டது. 

இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி குறுக்குச்சாலை சாலையில் ஊர் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஆய்வாளர் ஹரிகரன், எச்சரிக்கும் வகையில் பேசியதால் ஆத்திரமரைந்த பொதுமக்கள் போலீசுடன் மல்லு கட்டும் நிலை ஏற்பட்டது.