திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் - கலெக்டர் தகவல்
Thiruchendur Murugan
திருச்செந்தூர் கந்தசஷ்டித் திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (09.10.2025) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் 2025-ஆம் ஆண்டு கந்தசஷ்டித் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்ததாவது : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் 2025 ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா 22.10.2025 முதல் 28.10.2025 வரை நடைபெறவுள்ளது. 27.10.2025 அன்று மாலை 04.00 மணியளவில் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல், 28.10.2025 அன்று அதிகாலை 05.30 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், அன்று மாலை 06.00 மணியளவில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழா நடைபெற்று, அன்று இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.
கந்தசஷ்டித் திருவிழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருக்கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 லட்சம் லிட்டர் வீதம் 22.10.2025 முதல் 28.10.2025 முடிய குடிதண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்யவும், திருச்செந்தூர் நகராட்சி சார்பாக திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்திடவும், திருச்செந்தூர் ஆவுடையார் குளத்திலிருந்து போதுமான அளவு தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை தயாராக இருக்க வேண்டும்.
பொது சுகாதாரம் சார்பாக திருச்செந்தூர் நகர்ப் பகுதியில் குப்பைக் கூளங்களை அவ்வப்போது அகற்றிடவும், ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை இல்லாமல் இருக்க திருச்செந்தூர் நகர் பகுதி மற்றும் திருக்கோயில் வளாங்களில் கொசு மருந்து தெளிக்கவும், சஷ்டித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 6 நாட்களும் விரதம் இருப்பதால் பக்தர்கள் வெறிநாய்க்கடிக்கு ஆளாகாமல் இருக்கும் பொருட்டு திருக்கோயில் வளாகங்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து செல்லவும், கடற்கரை பகுதியில் இருந்து திருக்கோயிலுக்கு வரும் மாடுகளை பிடித்துச் செல்ல திருச்செந்தூர் நகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் திருக்கோயில் வளாகம், குரும்பூர் - குரங்கன்தட்டு நீரேற்று நிலையம். திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்று நிலையம், ஆகியவைகளுக்கு ஒன்றாம் திருநாள் முதல் ஏழாம் திருநாள் முடிய (22.10.2025 முதல் 28.10.2025 வரை) தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவும், போக்குவரத்து துறையின் சார்பாக 27.10.2025 சூரசம்ஹாரம் அன்று பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வருகை தருவதால் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், சூரசம்ஹாரம் அன்று தென்னக ரயில்வே மூலம் சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்புத் தொடர்வண்டிகள் இயக்கிடவும், கடற்கரைப் பகுதியில் கடல் பாதுகாப்பு வளையத்துடன் தீயணைப்புத் துறையினர் பணிபுரியவும், கடலில் நீராடும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யும் பொருட்டு கடல் குளியாட்கள் 4 நபர்கள் மற்றும் கடலாள் ஒருவரை அனுப்பி வைக்க மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கந்தசஷ்டித் திருவிழாக் காலங்களில் நகர் முழுவதும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் அலைபேசி/தொலைபேசி சீராக இயங்கத்தக்க வகையில் தற்காலிக அலைபேசிக் கோபுரம் அமைத்து அலைபேசி/தொலைபேசி இணைப்புகள் முறையாக சரிவர இயங்கச் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார். மேலும் மருத்துவத்துறை சார்பாக திருவிழாக் காலங்களில் தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், திருக்கோயில் வளாகத்தில் திருவிழாக்காலங்கள் முழுவதும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடனும், அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதியுடனும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்திடவும், திருக்கோயிலை சுற்றித்திரியும் நாய்களால் பக்தர்கள் பாதிக்கப்பட்டால் உரிய மருத்து சிகிச்சை வழங்கும் வகைக்கு வெறிநாய்க்கடிக்கான மருந்துகள் (Anti Rabbies Vaccines) இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், தீயணைப்பு & மீட்பு பணிகள் துறை சார்பாக திருவிழாக்காலங்களில் தீயணைப்பு ஊர்தி முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டும், மருத்துவ ஊர்தியுடன் தயார் நிலையில் வைத்திருக்கவும், வேளாண்மை பொறியியல் துறை சார்பாக திருக்கோயில் கடற்கரையில் உள்ள மேடுபள்ளங்களை சீரமைக்கவும், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அங்காங்கே பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தினை ஆய்வு செய்து, பரிந்துரை செய்த பின்னரே அன்னதானத்தினை பக்தர்களுக்க வழங்க அறிவுறுத்தினார். காவல்துறை சார்பாக 22.10.2025 முதல் 28.10.2025 முடியவுள்ள திருவிழா காலங்கள் முழுவதும் திருக்கோயில் வாளகத்தில் பக்தர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கவும், கந்த சஷ்டி திருவிழா காலங்களில் திருக்கோயிலுக்குள் பக்தர்கள் வரிசை முறையில் நன்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு காவல்துறையினர் திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவும், 27.10.2025 சூரசம்ஹாரம் அன்று திருக்கோயில் கடற்கரையில் போதிய பாதுகாப்புக்கு போதிய காவலர்கள் நியமிக்கவும் மற்றும் சுவாமி சப்பரத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கும், சூரசம்ஹாரம் அன்று திருச்செந்தூர் நகர் முழுவதும் போக்குவரத்து வாகனங்களை கட்டுப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளவும், சூரசம்ஹாரம் அன்று திருக்கோயிலுக்கு வருகை தரும் வாகனங்களுக்குத் வாகன அனுமதிச் சீட்டுகள் (CAR PASS) அச்சிடுதல் மற்றும் விநியோகம் செய்தல் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
திருக்கோயில் யாகசாலையின் அருகில் அமைக்கப்படவுள்ள மர கேலரி மற்றும் கடற்கரையில் உள்ள மர மேடைகளை (Watch Tower, T.V.Tower) ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கவும், திருச்செந்தூர் நகரில் இரும்பினால் ஆன தற்காலிக பாலம் திருக்கோயில் மூலம் அமைக்கப்படுவதை பொதுப்பணித்துறை மேற்பார்வை செய்ய வேண்டும். திருவிழாக் காலங்களுக்கு முன்பாக நகராட்சிக்கு உட்பட்ட தெரு விளக்குகள் அனைத்தும் இயங்கும் நிலையிலிருப்பதை உறுதி செய்ய நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், திருச்செந்தூர் நகர் முழுவதும் உள்ள பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுத்திட கழிவுநீர் அப்புறப்படுத்தும் வாகனங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக போற்றப்படுவதும், தமிழகத்தின் தலைசிறந்த திருக்கோயில்களில் முக்கியமானதாக கருதப்படுவதுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டித் திருவிழா சீரும் சிறப்போடும் நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களின் ஒத்துழைப்பும் வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.கௌதம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தக்கார் அருள்முருகன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் ராமு மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
nadunilai.com