அதிமுகவோடு கூட்டணி வைப்பதே தவெகவுக்கு நல்லது
ADMK - TVK
யாரும் எதிர் பார்க்காத அளவிற்கு வெற்றியை குவித்திருக்கிறது விஜையின் தமிழக வெற்றிக்கழகம். ஆனால் ஆட்சி அமைக்க முடியாமல் யார் யாரிடமோ உதவிகளை கேட்டு வருகிறார்கள் விஜையும் அவரது சகாக்களும். 234 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவர்களே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தவெக பெற்றிருப்பதோ விஜையை சேர்த்து 108 உறுப்பினர்கள். ஆட்சி அமைக்க இன்னும் 10 பேர் தேவைப்படுகிறார்கள். அதிமுக மட்டும் தனியாக 47 உறுப்பினர்களையும், திமுக மட்டும் தனியாக 59 உறுப்பினர்களையும் பெற்றிருக்கின்றன. அதிமுக கூட்டணியில் பாமக 4, பாஜக 1, அமமுக 1, திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5, விசிக 2, மா.கம்யூ 2, இ.கம்யூ 2, தேமுதிக 1, இ.மு.லீக் 2 என உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கூட்டணியில் இருந்து விலகி, தவெக அணிக்கு மாறியிருக்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்ற கையோடு தனிப்பெரும்பான்மை கட்சியான தவெக ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. ஆனால் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஆளுநரை சந்தித்து உரிமை கோரும்போது தனிப்பெரும்பான்மை கட்சி என்கிற அடிப்படையில் உரிமை கோரினால், ஆட்சி அமைத்த பின்னர் அவர்கள் சட்டமன்றத்தில் பலத்தை நிரூபித்து காட்டிவிடலாம். ஆனால் காங்கிரஸை அடையாளம் காட்டிவிட்டு தேவைப்படும் மீதமுள்ள ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கையை தருகிறோம் என்கிற அர்த்தத்தில் கோரியதால், மீதமுள்ள உறுப்பினர்கள் குறித்த விபரங்களை கேட்டு ஆளுநர் காலதாமதம் செய்யும் நிலை ஏற்பட்டது. மேலும் தனிப்பெரும்பான்மை கட்சி என்றாலும் ஆளுநருக்கு நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே அதற்கும் இசைவு அளிக்கமுடியும் என்கிற அடிப்படையில் ஆளுநர் தவெகவினரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இக்கட்டான நிலையில் வெளியில் வந்து அவர்கள் ஆதரவு கேட்கும் நிலை ஏற்பட்டது. அவ்வாறு கேட்டு வரும்போது, மதவாத அணிக்கு விஜய் போய்விட கூடாது என்று விசிக, காங்கிரஸ் தரப்பில் இருந்து கருத்து வெளியானதால், தவெகவினர், திமுக அணியில் உள்ள விசிக மற்றும் இடதுசாரிகளிடம் ஆதரவு கேட்கும் நிலைக்கு வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக அவர்களோடு தவெகவினர் மன்றாடி வருகின்றனர். கூட்டத்தை கூட்டி முடிவு சொல்கிறோம் என்கிறார்கள் அவர்கள். ஆனால் அவர்கள் அதிமுக அணிக்கு தவெக சென்றுவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர். அவசரசப்பட்டு காங்கிரஸை அழைத்து வைத்துள்ளதால் கூட்டணி முரண்பாடுள்ள கட்சிகள் ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேருக்கு நேர் எதிரியாக இருந்துவரும் அதிமுகவும், திமுகவும் கூட ஓரணியில் நின்று ஆட்சி அமைக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது. அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை என்றாலும் அத்தகைய நகர்வும் இடம்பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது. தவெகவை அதிமுக பக்கத்திற்கு போகவிடாமல் தடுக்கவே விசிக போன்ற கட்சிகள் காலம் தாழ்த்துவதாக சிலர் கருத்து சொல்கின்றனர். தேர்தல் நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமையும்போது இப்படித்தான் விசிக, காங்கிரஸ் கட்சிகளை நம்பி எடப்பாடி பழனிசாமி கடைசியில் ஏமாந்தார். அதுபோல் விஜய் ஏமாறப்போகிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
அதிமுகவோடு இணங்கி சென்றால் அங்கு பாஜக இருக்கிறது. பாஜகவை கொள்கை எதிரியாக கூறிவந்துவிட்டு அத்துடன் கூட்டணி அமைப்பது தவறு என்று விஜயுடன் இருக்கும் சில நிர்வாகிகள் கூறுகின்றனர். பாஜகவை காட்டி பயமுறுத்தி செய்யும் அரசியல் எதிரணியினரால் கட்டமைக்கும் செயல். எனவே அதை கண்டு கொள்ள வேண்டியதில்லை.
எனவே காங்கிரஸை வைத்துக் கொண்டு விசிக, இடதுசாரி கட்சிகளோடு மட்டும் ஆட்சி நடத்தினால் மத்திய பாஜக அரசு எந்த அளவிற்கு துணையாக இருக்கும் என்று சொல்லமுடியாது. எனவே விஜய் இப்போது காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளை விட்டுவிட்டு அதிமுகவோரு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதே சிறந்தது. அப்படியானால் மத்தியரசின் ஒத்துழைப்பும் கிடைக்கும், அனுபவமும் கிடைக்கும். முதல்வர் பொறுப்பை எப்படி பங்கீட்டுக் கொள்வது என்பதைமட்டும் பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும். இதை தவறவிட்டால் நிலையான அரசை அமைப்பது எளிதல்ல.
ஆதரவு தருகிறோம் என்று கூறிவரும் விசிக மற்றும் இடதுசாரிகள் உடனடியாக முடிவை அறிவிக்காமல் முதலில் ஆளுநர் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கூறிவருவதில் நியாயம், நேர்மை இருப்பதாக தெரியவில்லை. முழுமையாக அவர்கள் திமுக கூட்டணியைவிட்டு விட்டு வருவார்களா என்றும் தெரியவில்லை. எனவே அதிமுகவை தேர்ந்தெடுப்பதே தவெகவின் சரியான தேர்வாக இருக்க முடியும்.
nadunilai.com