தமிழக பாஜக வளர்ச்சிக்கு அதிகாரமுள்ள அண்ணாமலை அவசியம்

Bjp.Annamalai

தமிழக பாஜக வளர்ச்சிக்கு அதிகாரமுள்ள அண்ணாமலை அவசியம்

தமிழக அரசியல் களத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளன.

தமிழகத்தில்அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அதில் அண்ணாமலை போட்டியிட காத்திருந்த சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை. இது, அண்ணாமலை ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவர்கள் அண்ணாமலைக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் பாஜகவை அடித்தள மட்டத்துக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியவராக அண்ணாமலை கருதப்படுகிறார். அவருக்கு முன்னதாக தமிழிசை செளந்திரராஜன் “தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்ற அரசியல் கோஷத்தை முன்வைத்திருந்தார்.  அதை செயல்முறையில் முன்னெடுத்து வந்தவர் அண்ணாமலை என்பதே அவரது ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது. அவர் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் கிராமங்கள் வரை கட்சியின் அடையாளத்தை கொண்டு சென்றதாகவும், சமூக வலைதளங்களில் பெரிய ஆதரவை உருவாக்கியதாகவும் கூறிவருகின்றனர். 

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சூழலில், அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி முன்வைத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைமை, அண்ணாமலையை மாற்றி நயினார் நாகேந்திரனை  மாநிலத் தலைவராக நியமித்தது. இந்த மாற்றம் தற்காலிகமானதாக இருந்தாலும், கட்சியின் வேகத்தில் ஒரு அளவு குறைவு ஏற்பட்டதாக சில அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர். தற்போதைய தொகுதி பங்கீட்டில் அண்ணாமலை விரும்பிய தொகுதி கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதால், அவர் இந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற மனநிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவரது ஆதரவாளர்களிடையே கவலைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் அண்ணாமலைக்கு ஆதரவாக கருத்துகள் அதிகரித்து வருகின்றன. “அண்ணாமலை தேர்தலில் இருந்து விலகக்கூடாது; அவர் இல்லையெனில் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பாதிக்கப்படும்” என்ற கருத்து பல இடங்களில் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், பாஜக தேசிய தலைமை தலையிட்டு, அண்ணாமலை விரும்பிய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து அவரை தேர்தல் களத்தில் நிறுத்த வேண்டும் என்பது தமிழக பாஜக ஆதரவாளர்களின் முக்கிய கோரிக்கையாக உருவெடுத்துள்ளது. போட்டியிட வாய்ப்பே வழங்காமல் அவரை பிரசாரம் செய்ய சொன்னால் அவரால் எப்படி பிரசாரம் செய்ய முடியும் என்று கேட்கிறார்கள்.

வரவிருக்கும் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவது அல்லது இல்லாதிருப்பது, பாஜகவின் எதிர்கால வளர்ச்சிக்கும், கூட்டணிக் கணக்குகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கட்சியின் வாக்கு வங்கி விரிவடைவதில் அவரது பங்கு தொடருமா என்பது கவனிக்கப்படும் முக்கிய அரசியல் கேள்வியாக மாறியுள்ளது.