2026 சட்டமன்ற தேர்தல்: நான்கு முனை அரசியல் யுத்தம் – திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம்

Tamil nadu

2026 சட்டமன்ற தேர்தல்: நான்கு முனை அரசியல் யுத்தம் – திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம்

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக திமுக – அதிமுக என்ற இரு பிரதான அரசியல் அணிகளுக்குள் மட்டுமே சுழன்று வந்த தேர்தல் களம், கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வளர்ச்சி, பாரம்பரிய திராவிட கட்சிகளை தங்களை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளியது.

தமிழ் அடையாள அரசியல், இளைஞர்கள், சமூக ஊடக ஆதரவு போன்ற தளங்களில் நாம் தமிழர் கட்சி நிலைப்பெற்ற போது, திமுக அதனை மிக கவனமாக அணுகியது. “தமிழ் அரசியல் வாக்குகளை நாம் தமிழர் கட்சி கைப்பற்றிவிடுமோ?” என்ற அச்சம், திமுகவின் பல அரசியல் நகர்வுகளில் வெளிப்படையாக தெரிந்தது. இருப்பினும், சீமான் தனது சொந்த உழைப்பாலும் தொடர்ச்சியான களப்பணியாலும் மெல்ல மெல்ல கட்சியை வளர்த்து வந்திருக்கிறார்.

இந்தச் சூழலில்தான், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றி கழகம்’ அரசியல் களத்தில் நேரடியாக குதித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணிக்கும் இக்கட்சி, அரசியல் வட்டாரங்களில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, திமுகவுக்கே அதிக அரசியல் சவாலாக தமிழக வெற்றி கழகம் மாறக்கூடும் என்ற கணிப்புகள் வலுப்பெற்று வருகின்றன.

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக முயற்சி செய்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் அது சாத்தியமாகாத நிலையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் தொடர முடிவு செய்துள்ளது. இதனால், அதிமுக – பாஜக கூட்டணியை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக ஏற்கனவே உள்ளது. அதோடு, விஜயின் புதிய அரசியல் அணியும் களமிறங்கியிருப்பது திமுகவுக்கு கூடுதல் அழுத்தமாக மாறியுள்ளது.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி,நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை அரசியல் போட்டி உருவாகும் சூழல் தெளிவாகிறது.

திமுக கூட்டணிக்குள் உள்ள காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றி கழகத்துக்கு நகருமோ என்ற சந்தேகம் ஒருபுறம் எழுந்தாலும், இதுவரை அதற்கான உறுதியான அரசியல் நகர்வு எதுவும் வெளிப்படவில்லை. இதே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமீப கால அரசியல் குழப்பங்களுக்கு பிறகு, “திமுக கூட்டணியில்தான் தொடர்வோம்” என்று உறுதியாக அறிவித்துள்ளது.

மற்றொரு புறம், அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாஜக இணைந்துள்ள நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் சேருமா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது. ஆனால், அந்தக் கூட்டணியின் இறுதி வடிவம் எப்படியிருக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இந்நிலையில், சீமான், திருமாவளவன், விஜய் ஆகியோர் குறித்த கருத்துப் போர்கள் அரசியல் சூட்டை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கு நடுவே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் அரசியல் பேச்சுகள், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்வினைகள் தமிழக அரசியலை தினந்தோறும் சூடுபிடிக்கச் செய்து வருகின்றன.

அரசியல் வட்டாரங்களின் கணிப்புப்படி, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, கூட்டணி மாற்றங்கள், புதிய அரசியல் வியூகங்கள், கட்சிகளுக்கிடையேயான நேரடி மோதல்கள் மேலும் தீவிரமடையும். இதனால், வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல், கடந்த தேர்தல்களை விட அதிக பரபரப்பான மற்றும் தீர்மானகரமான அரசியல் போர்க்களமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.