மத உணர்வு பாசீசம் என்றால், இன உணர்வும் பாசீசம்தானே மு.க.ஸ்டாலின் அவர்களே.?

M.K.STALIN

மத உணர்வு பாசீசம் என்றால், இன உணர்வும் பாசீசம்தானே மு.க.ஸ்டாலின் அவர்களே.?

பெரும்பாலான இடங்களில் பேசும்போது திமுக தலைவர்கள், இன உணர்வு வேண்டும் என்றே பேசியிருக்கிறார்கள். அதாவது தமிழர் என்கிற உணர்வு வேண்டும் என்கிறார்கள். அதேவேளை அவர்களே மத உணர்வை விமர்சனம் செய்கிறார்கள். குறிப்பாக இந்து மதம் குறித்து விமர்சனம் செய்வதும், இந்து மத முக்கியஸ்தர்களை விமர்சனம் செய்வது மட்டுமே தங்கள் கொள்கையாக கொண்டிருக்கிறார்கள். அது குறித்து அவர்கள் மீது இந்து மதத்தினர் கேள்வி கேட்டால் நாங்கள் இந்து மதத்துக்கு எதிரி அல்ல. அதனை வழிநடத்தும் ஆரியர்களுக்கே எதிரி என்பது போல் பேசுகிறார்கள். 

குறிப்பாக இன்று(21.10.2023) ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு பாசீச கூட்டம் மதத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறது. தமிழகத்தை அழிக்க பாஜக நினைக்கிறது. என்மனைவி கோவிலுக்கு போவதை விமர்சனம் செய்கிறார்கள். என் மனைவி தமிழகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும்தான் போய் வருகிறார். அது அவருடைய விருப்பம். அதை நாங்கள் யாரும் தடுக்கவில்லை. எங்களுக்கு ஆன்மிகம் எதிரி அல்ல. ஆரிய ஆதிக்கமே எதிரி என்று பேசியிருக்கிறார்.  

ஆன்மிகத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்கிற அதே வரிசையில் ஆரியத்துக்கு எதிரானவர்கள் என்று கூறியிருப்பதில் என்ன விளக்கம் பெறுவது. இந்திய ஆன்மிகத்தில், தமிழக ஆன்மிகத்தில் ஆரியர்கள் என்று இவர்கள் விமர்சிக்கும் பிராமணர்கள் கலந்திருக்காமல் இல்லை. அதாவது ஆரியர் இல்லாத இந்து ஆன்மிகத்தை இதே மு.க.ஸ்டாலின் ஆதரிக்கிறாரா?. பிராமணர்களே சம்பந்தபடாத கோவில்கள் தமிழகத்தில் பல இருக்கிறது. அங்கு சென்று வழிபட மு.க.ஸ்டாலினுக்கு சம்மதமா?. எனக்கு தேவையில்லை என்று ஒதுங்கி கொள்ளும் இவர், தேவையில்லாத விவகாரத்தில் எதற்காக தலையிட வேண்டும்?. 

மதத்தை சொல்லி பாஜக மக்களை பிரிக்கிறது என்று சொல்லும் இவர், பாஜகவை பாசீசம் என்று பேசுகிறார். இதன் மூலம் பாஜகவிடமிருந்து இந்து மக்களை பகையாக்க, அவர்களை பிரிக்க முயற்சி செய்வதை பார்க்க முடிகிறது. பாஜக மக்களை பிரிக்கிறது என்று சொல்லும் இவர், தமிழகர்களுக்கு திராவிட இன உணர்வு வேண்டும் என்று அவ்வப்போது கூறுகிறாரகளே அது மட்டும் சரியா?. மத உணர்வு மட்டும் மக்களை பிரிக்கும், இன உணர்வு பிரிக்காதா?. இன உணர்வை ஊட்டி ஊட்டிதானே இப்போது பக்கத்து மாநிலத்தில் இருந்து தண்ணீர் பெறுவதை கூட கஷ்டமாக்கி உள்ளீர்கள் ஸ்டாலின் அவர்களே. இதெல்லாம் தவறென்று உங்களுக்கு புரியவில்லையா?. இன உணர்வை ஊட்டி குறிப்பிட்ட மக்களை உங்கள் ஆதரவாளர்களாக வைத்திருக்க நீங்கள் எப்படி முயற்சி செய்கிறீர்களோ, அதைத்தான் மதத்தை சொல்லி பாஜக செய்கிறது. 

மத உணர்வு பேசுவது தவறு என்கிற போது, இன உணர்வு பேசுவதும் தவறுதான். மதம் மட்டுமே மக்களை பிரிக்கும் காரணி அல்ல. இன உணர்வும் மக்களை பிரிக்கும் காரணிதான். அதாவது அதீத மத உணர்வு மட்டும் பாசீசம் அல்ல, அதீத இன உணர்வும் பாசீசமே.!