புதுக்கோட்டை ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்ல மாற்று வழியை கடைபிடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Thoothukudi - Tirunelveli

புதுக்கோட்டை ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்ல மாற்று வழியை கடைபிடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

அனைத்து மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படும் திட்டமே அனைத்து வகை மக்களுக்கும் பயன்படுவதாக இருக்கும். அதில் ஏனோ தானோ என்று எதாவது குறைகள் இருந்தால் அந்த திட்டம் அனைத்து வகையான மக்களுக்கும் பயன்படுவது கடினம். அப்படித்தான் ஆகிப்போனது தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்கோட்டை புதிய பாலத்தின் நிலைமை. இந்த பாலத்தால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதற்கு வசதி ஏற்பட்டிருக்கிறது என்றாலும் எங்களுக்கு போக்குவரத்து வசதிகள் தடைபட்டிருக்கிறது என்று புலம்புகிறார்கள் புதுக்கோட்டை மக்கள். 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டையை சுற்றி நிறைய கிராமங்கள் இருக்கிறது. தினம்தோறு அப்பகுதி மக்கள்,பள்ளி மாணவ,மாணவியர் என்று ஏராளமானோர் புதுக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். இந்த ஊர் அருகில்தான் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் இருக்கிறது. ஒரு காலத்தில், திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் பழைய பாலம் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றது. ஊருக்கு வெளியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு பாயிண்ட் டு பாயிண்ட் என்கிற  இடைநில்லா பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. மற்ற பேருந்துகள் வந்து சென்றன. 

இதற்கிடையே தற்போது,தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் திறந்த பிறகு அந்த பேருந்துகளும் வருவதில்லை. ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்லும் வகையில் முறையான திட்டமிடல் இல்லை. குழப்பத்தில் உள்ளதால் பேருந்துகள் வந்து செல்வதில்லை. குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து நெல்லை, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட வழித்தடத்திற்கு செல்லும் பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆனால் திருநெல்வேலி, ஸ்ரீவையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வரும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. குறிப்பிட்ட ஒரு பகுதியில் நின்று பேருந்தில் ஏறி, இறங்க முடியாமல் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அங்குமிங்குமாக ஓடி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நள்ளிரவு ஆனாலும் கூட நெல்லையில் இருந்து வருவோரை யூனியன் ஆபீஸ் அருகே அல்லது கூட்டுடன்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கிவிட்டுவிட்டு செல்லும் நிலைதான் இருந்து வருகிறது. பேருந்தைவிட்டு இறங்கும் பொதுமக்கள் அங்கிருந்து ஊருக்குள் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. 

இதற்கு நிரந்தர தீர்வு என்பது புதுக்கோட்டை பழைய பாலத்தை புதுப்பிக்க வேண்டும் அல்லது அதன் அருகே புதிய பாலம் ஒன்றை கட்ட வேண்டும். அவ்வாறு புதிய பாலம் கட்டப்படுமானால் தூத்துக்குடி - புதுக்கோட்டை - சாயர்புரம் - ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருநெல்வேலி இடையே பேருந்துகள் சென்று வர வசதியாக இருக்கும். இந்த திட்டம் நிறைவேறும் முன்பாக தற்காலிக திட்டம் அவசரமாக தேவைப்படுகிறது. அதாவது தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதில் இருந்து சற்று மாற்றம் செய்ய வேண்டும். 

அதாவது தூத்துக்குடியில் இருந்து வரும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முருகன் கோவில் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து அங்கிருந்து சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருநெல்வேலி ஊர்களுக்கு செல்கிறது. அதேவேளை, சாயர்புரம் மற்றும் சாயர்புரம் வழித்தட ஸ்ரீவைகுண்டம் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து புதிய மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக சாலையின் மறு திசைக்கு சென்று, அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலையை அடைந்து செல்கிறது. ஆனால் திருநெல்வேலி, பேரூரணி, செக்காரக்குடி மற்றும்  வாகைகுளம் வழித்தட ஸ்ரீவைகுண்டம் பேருந்துகள் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்லும் என்று அதிகாரிகள் கூறினாலும் அவைகள் புதுக்கோட்டை ஊருக்குள் இருந்து வெளியில் செல்வதற்கான வழித்தடம் முறையாக அமைக்கப்படவில்லை. அதனால் அப்பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வராமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலும், நடுக்கூட்டுடன்காடு ஊர் அருகில் தேசிய நெடுஞ்சாலையிலும் நின்று செல்கின்றன. இதனால் புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் மிகவும் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே புதுக்கோட்டை பழைய பாலம் அருகில் புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அதுவரை தற்காலிக போக்குவரத்து ஏற்பாட்டினை கடைபிடிக்க வேண்டும். 

தற்போது, தூத்துக்குடியில் இருந்து வரும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முருகன் கோவில் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வருகிறது. அதுபோல் புதுக்கோட்டை ஊர் வழியாக தூத்துக்குடி நோக்கி செல்ல உள்ள பேருந்துகளும் அதே முருகன் கோவில் வழியாக வெளியில் செல்ல வேண்டும். அதாவது, புதுக்கோட்டை ஊர் வழியாக தூத்துக்குடி நோக்கி செல்ல உள்ள பேருந்துகள் அதே முருகன் கோவில் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து இடது புறமாக திரும்பி சற்று தூரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று வலது புறமாக திரும்பி தூத்துக்குடி நோக்கி செல்லும்படி செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் திரும்பும்போது இரண்டு புறமும் ஓட்டுநர் பார்வை பகுதியில் இருப்பதால் பிரச்னை வராது. எனவே இந்த முறையில் பேருந்துகளை இயக்கினால் மட்டுமே திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்ல முடியும். வழக்கம்போல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்திலும் பேருந்து நிற்கும், கூட்டுடன்காடு அருகிலும் பேருந்துகள் நின்று செல்ல வசதியாக இருக்கும்.  பழைய பாலத்தில் புதிய பாலம் கட்டும்வரை இந்த முறையை பின்பற்றவேண்டும். 

புதுக்கோட்டை வழியாக கூட்டாம்புளி, குலையன்கரிசல், சாயர்புரம்,ஏரல்,ஸ்ரீவைகுண்டம் என பல ஊர்களுக்கு பேருந்துகள், வாழைக்காய் லோடு வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதெற்கெல்லாம் பழைய பாலத்தில் புதிய பாலம் கட்டினால் மட்டுமே போக்குவரத்து எளிதாக அமையும்.  அதற்கு முன்பாக இந்த தற்காலிக ஏற்பாட்டினை செய்து கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. எனவே அரசு நிர்வாகம், இப்பகுதி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த தற்காலிக மாற்றங்களை அவசரமாக செய்து கொடுக்க வேண்டும். தற்போது ஆம்னி பேருந்துகள் உள்பட பல வாகனங்கள் நாம் கூறும் இந்த வழியாகவும் சென்று வருகிறது என்பது குறிப்பிட தக்கது.