இளைஞர் வாக்குகள் யாரை உயர்த்தும்? யாரை பின்னுக்கு தள்ளும்? - பலவீனங்களால் நிரம்பிய 2026 தேர்தல் களம்

election

இளைஞர் வாக்குகள் யாரை உயர்த்தும்? யாரை பின்னுக்கு தள்ளும்? - பலவீனங்களால் நிரம்பிய 2026 தேர்தல் களம்

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநில அரசியல் களம் வேகமாக மாற்றமடைந்து வருகிறது. குறிப்பாக புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு செல்லப்போகிறது? என்பதே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

ஆளும் கட்சி முதல் புதிய அரசியல் இயக்கங்கள் வரை, ஒவ்வொரு கட்சியும் தங்களின் பலங்களை முன்வைக்க முயற்சிக்கும் வேளையில், உள் குழப்பங்கள், கூட்டணி அரசியல், கொள்கை முரண்பாடுகள் ஆகியவை கட்சிகளின் பலவீனங்களாக வெளிப்பட்டு வருகின்றன.

அதிமுக – பாரம்பரிய ஓட்டு வங்கி, ஆனால் தொடரும் வீக்குகள் : தமிழகத்தில் நீண்ட காலமாக “அனைவருக்கும் பொதுவான கட்சி” என அழைக்கப்படும் அதிமுக, இன்னமும் கணிசமான ஓட்டு வங்கியை வைத்துள்ளது. ஆனால் சமீப கால அரசியல் மாற்றங்கள், அந்தக் கட்சியின் பலத்தைவிட பலவீனங்களையே அதிகமாக வெளிக்கொண்டு வந்துள்ளன.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) நீக்கம், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக விலகல், செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் விலகல், தேர்தலை எதிர்கொள்ள போதிய மற்றும் உறுதியான கூட்டணி இல்லாத நிலை, இந்த சூழல், குறிப்பாக புதிய தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் அதிமுகவின் ஈர்ப்பை குறைக்கும் காரணமாக பார்க்கப்படுகிறது.

திமுக – ஆட்சியின் பலம், ஆனால் மத உணர்வுகள் தொடர்பான விமர்சனம் : சமத்துவம், சமூக நீதி, நாத்திகம் போன்ற கொள்கைகளை முன்வைக்கும் திமுக, ஆளும் கட்சியாக இருப்பதால் அரசியல் முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும், சமீப காலத்தில் திமுக தலைமையின் சில பேச்சுகள் மற்றும் நிர்வாக முடிவுகள், இந்து மத மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சில கருத்துகள், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் சாதகமாக இருந்ததாக கூறப்படும் முடிவு. இவை திமுக மீது “இந்து விரோத பார்வை” என்ற விமர்சனத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த அம்சம், நகர்ப்புறம் மற்றும் இளைஞர் வாக்குகளில் திமுகவுக்கு ஒரு வீக்காக மாறக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பாஜக – கூட்டணி அரசியலால் உருவான வீக் : இந்திய தேசியம், பண்பாடு, கலாச்சாரம், பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பாஜக, தமிழகத்தில் தொடர்ந்து வளர்ந்து வரும் அரசியல் சக்தியாக உள்ளது. அண்ணாமலை தலைமையில், திமுக அரசுக்கு எதிரான அரசியல் விவாதங்களை தீவிரப்படுத்தி, பாஜக தமிழக அரசியலில் தனித்த அடையாளத்தை உருவாக்கியது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்கிற அரசியல் கணக்கில், “அண்ணாமலையை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி வேறு ஒருவரை நியமிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை அதிமுக முன்வைத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காகவே,அண்ணாமலையை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலக்கி, நயினார் நாகேந்திரனை புதிய மாநில தலைவராக பாஜக தலைமை நியமித்தது. இந்த முடிவு,பாஜக தொண்டர்களிடையே மாறுபட்ட கருத்துகளை உருவாக்கியதுடன், அண்ணாமலை தலைமையில் உருவான ஆக்ரோஷமான அரசியல் வேகத்தை தற்காலிகமாக குறைத்ததாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும், பாஜகவின் அடிப்படை வாக்குவங்கி முழுமையாக சிதறும் நிலை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் – தேசிய கட்சி, ஆனால் அரசியல் தெளிவின்மை : சுதந்திரப் போராட்ட வரலாற்றை கொண்ட காங்கிரஸ் கட்சி, தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தாலும், தமிழகத்தில் அதன் நிலை பலவீனமாகவே உள்ளது. ராகுல் காந்தியின் தெளிவற்ற அரசியல் நிலைப்பாடு, வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்து இந்திய அரசியல், பாஜக ஆட்சி குறித்து விமர்சனம் செய்வது, இந்த நடவடிக்கைகள், காங்கிரஸ் மீது நம்பகத்தன்மை குறையும் சூழலை உருவாக்கியுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் தமிழர் – இளைஞர் ஆதரவு, ஆனால் புதிய அரசியல் போட்டி : தமிழ் தேசியம், தமிழ் மொழி பாதுகாப்பு, இயற்கை வள பாதுகாப்பு போன்ற கொள்கைகளால் இளைஞர்களை கவர்ந்த நாம் தமிழர் கட்சி, தற்போது அதிமுக–திமுகவுக்கு அடுத்த முக்கிய அரசியல் சக்தியாக பார்க்கப்படுகிறது. தலைவர் சீமானின் அதிரடி பேச்சுகள் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், நடிகர் விஜய் அரசியலில் நேரடியாக களமிறங்கியது, நாம் தமிழர் கட்சிக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர் வாக்குகளில் ஒரு பகுதி தமிழக வெற்றி கழகம் பக்கம் நகரக்கூடும் என்பதால், நாம் தமிழர் கட்சி வீக்கடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழக வெற்றி கழகம் – விஜய் அரசியல் கணக்கை மாற்றுவாரா? நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் (தவெக), இன்னும் முழுமையாக அளவிட முடியாத அரசியல் சக்தியாக உள்ளது. ஆனால், திமுக – பாஜக இரண்டுக்கும் எதிரான நிலைப்பாடு, இளைஞர்கள், முதல் முறையாக வாக்களிப்பவர்கள் மீது உள்ள தாக்கம் என காரணங்களால், அனைத்து கட்சிகளின் வாக்கு கணக்கையும் குழப்பும் புதிய சக்தியாக தவெக பார்க்கப்படுகிறது.
அரசு திட்டங்கள் – இளைஞர் வாக்குகளை தக்கவைக்கும் முயற்சி?இந்த அரசியல் மாற்றங்களை உணர்ந்தே, தமிழக அரசு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான பல்வேறு சிறப்பு சலுகை திட்டங்களை தீவிரமாக அறிவித்து வருகிறது. இது அரசியல் ரீதியாக இளைஞர் வாக்குகளை தக்கவைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. 

இறுதியில் முடிவு?

இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் அதிகமாக உள்ள இந்த தேர்தலில், யார் அரசியல் லாபம் அடைவார்கள்? யார் பின்னுக்கு தள்ளப்படுவார்கள்? என்பது தற்போது தெளிவாக கணிக்க முடியாத நிலை தொடர்கிறது. அனைத்து அரசியல் கணக்குகளுக்கும் விடை, வரும் மே மாதத்தில் தெரிய வரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.