பாமகவில் உச்சக்கட்ட அரசியல் யுத்தம்! அன்புமணி–ராமதாஸ் மோதலுக்கு திமுக காய் நகர்த்தல் காரணமா?

PMK

பாமகவில் உச்சக்கட்ட அரசியல் யுத்தம்! அன்புமணி–ராமதாஸ் மோதலுக்கு திமுக காய் நகர்த்தல் காரணமா?

சேலம் / சென்னை :

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையிலான அரசியல் மோதல், தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொடங்கிய இந்த மோதல், கட்சி பிளவு, பொதுக் குழு மோதல், தேர்தல் ஆணைய விவகாரம் என பல கட்டங்களாக தீவிரமடைந்துள்ளது.

கூட்டணி விவகாரம் – மோதலின் மையம்

அன்புமணி ராமதாஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) – அதிமுக உடன் இணைந்து பாமக செல்ல வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய அரசியலுடன் இணைந்து சென்றால், பாமக மீண்டும் அரசியல் ரீதியாக வலுப்பெறும் என்பதே அவரது அணியின் கணிப்பு. ஆனால், இந்த நிலைப்பாடு ராமதாஸுக்கு பிடிக்கவில்லை. பிடிக்காமல் போனதற்கு திமுகவின் மறைமுக காய் நகர்த்தலும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை, பாமகவின் ஒரு பிரிவு தலைவர்கள் முன்வைக்க தொடங்கியுள்ளனர். கூட்டணி விவகாரத்தில் அவசர முடிவு எடுப்பதை ராமதாஸ் தவிர்த்ததும், இதற்கு வலுவூட்டும் காரணமாக பேசப்படுகிறது.

“திமுகவுக்கு சாதகமாக சூழல் நகருமா?”

பாமக வட்டாரங்களில் பேசப்படுவது என்னவென்றால், அன்புமணியின் அதிமுக – பாஜக கூட்டணி விருப்பம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒருங்கிணையும். ஆனால், கட்சியை இப்படியே பிளவுடன் தேர்தல் வரை கொண்டு சென்றால், அன்புமணி விரும்பும் ஒட்டுமொத்த வாக்குகள் அதிமுக – பாஜக பக்கம் முழுமையாக போகாமல், சிதறிவிடும் அபாயம் உள்ளது என அன்புமணி ஆதரவு பாமகவினர் சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சேலத்தில் கண்ணீர் – ராமதாஸின் உருக்கமான பேச்சு

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று சேலத்தில் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், அரசியல் மட்டுமின்றி உணர்ச்சி ரீதியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “சமீப காலமாக எனக்கு தூக்கமே வரவில்லை. தூங்கினாலும் என் தாய் கனவில் வந்து ‘ஏன் அழுகிறாய்?’ என்று கேட்கிறார்கள்” என ராமதாஸ் கூறியபோது, வார்த்தைகள் வராமல் தழுதழுத்து கண்ணீர் விட்டார். அருகில் இருந்த அவரது மகள் ஸ்ரீ காந்தி, ஜி.கே. மணி உள்ளிட்டோர் அவரது கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினர். கூட்டத்தில் இருந்தவர்கள் ஆதரவு கோஷம் எழுப்பினர்.

அன்புமணி மீது கடும் குற்றச்சாட்டு

“ஒரு தகப்பன் தன் பிள்ளைக்காக செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தேன். மருத்துவம் படிக்க வைத்து, 36 வயதில் ராஜ்யசபா எம்பி, மத்திய அமைச்சர் ஆக்கினேன். இப்போது என்னையும் ஜி.கே. மணியையும் அவமானப்படுத்துகிறார். நேரடியாக தாக்க ஆரம்பித்துள்ளார்” என ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
மேலும்,“95% பாமகவினர் என் பின்னால்தான் இருக்கிறார்கள். அவர்களின் பின்னால் 5% பேர் கூட இல்லை. அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து பம்மாத்து கூட்டங்களை நடத்துகிறார்கள்” எனவும் தெரிவித்தார்.

பதவி மாற்றம் – அதிகாரம் ராமதாஸுக்கு

இந்த பொதுக்குழுவில்,பாமக கட்சித் தலைவராக ராமதாஸ்,கௌரவத் தலைவராக ஜி.கே. மணி,செயல் தலைவராக ஸ்ரீ காந்தி தேர்வு செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்கும் முழு அதிகாரமும் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவராக இருந்த அன்புமணியின் மனைவி சௌமியா பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு ஸ்ரீ காந்தி நியமிக்கப்படுவார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்புமணி தரப்பு: “கேலிக்கூத்து”

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி ஆதரவாளரும் வழக்கறிஞருமான பாலு, “சேலத்தில் நடந்த பொதுக்குழு கேலிக்கூத்து. தலைவர் அல்லது பொதுச் செயலாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். அங்கு எடுக்கப்பட்ட எந்த முடிவும், அன்புமணி தலைமையிலான பாமகவை கட்டுப்படுத்தாது” என கூறினார்.

மேலும், தேர்தல் ஆணையம், ராமதாஸ் தன்னை தலைவர் என அறிவித்த தீர்மானங்களை நிராகரித்துள்ளதாகவும்,ஆகஸ்ட் 9 அன்று நடந்த பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் அன்புமணியின் தலைவர் பதவி 2026 ஆகஸ்ட் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பாலு சுட்டிக்காட்டினார். 

பிளவு தொடர்ந்தால் யாருக்கு லாபம்?

பாமகவின் இந்த தந்தை–மகன் அரசியல் யுத்தம்,அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாதகமா? அல்லது திமுகவுக்கு மறைமுகமாக சாதகமா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. அன்புமணி ஆதரவு தரப்பில் சிலர்,“தேர்தல் முடியும்வரை கட்சி இப்படியே பிளவுடன் சென்றால், வன்னியர் வாக்குகள் சிதறும். அது யாருக்கும் நல்லதல்ல” என வெளிப்படையாக அச்சம் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். 

பாமகவின் இந்த உள்கட்சி போராட்டம் எப்போது முடிவுக்கு வரும், இறுதியில் எந்த கூட்டணி உருவாகும் என்பதே 2026 தேர்தலுக்கான தமிழக அரசியலின் முக்கிய திருப்பமாக அமையப் போகிறது.