தவெக கட்சிக்கு ‘விசில்’ சின்னம் : அப்படியானால் வழிநடத்த போகிறாரா விஜய்?

Tvk News

தவெக கட்சிக்கு ‘விசில்’ சின்னம் : அப்படியானால் வழிநடத்த போகிறாரா விஜய்?

நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் (தவெக)-க்கு, இந்திய தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. இந்த சின்னம் அரசியல் மட்டுமல்லாமல், ஜோதிட ரீதியாகவும் விஜய்க்கு சாதகமாக அமைந்துள்ளதாக அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் விஜய் மிதுன ராசி, ரோகிணி நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. மிதுன ராசிக்குரிய கிரகம் புதன். புதன் என்பது, தகவல் பரிமாற்றம், வழிநடத்தும் திறன், மக்கள் தொடர்பு, குரல், சைகை, சின்னங்கள் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. இந்த அடிப்படையில், ஒலி மூலம் கவனம் ஈர்க்கும் ‘விசில்’ சின்னம், விஜயின் ராசி தன்மைக்கு ஏற்றதாக இருப்பதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். 

விசில் என்பது கூட்டத்தை கட்டுப்படுத்த, திசை காட்ட, எச்சரிக்கை செய்ய, அனைவரின் கவனத்தையும் ஒரே நேரத்தில் ஈர்க்க பயன்படும் ஒரு கருவி. அரசியல் ரீதியாக இதை “மக்களை ஒரே பாதையில் வழிநடத்தும் தலைமைச் சின்னம்” என தவெக நிர்வாகிகள் விளக்குகின்றனர். மேலும், “விசில் அடிப்பது தலைமைக்குரிய செயல். விசில் அடிப்பவன் பின்னால் மக்கள் திரளுவார்கள்” என்று தவெகவினர் தெரிவிக்கின்றனர்.  

தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள இரண்டு யானைகள், வலிமை, நிலைத்தன்மை, அரச அதிகாரம், வெற்றியின் தொடர்ச்சி ஆகியவற்றை குறிக்கின்றன. இதை அறிமுக பொதுக்கூட்டத்தில் விஜய், “இந்த வடிவமைப்பு வெற்றியின் அடையாளம்” என்று கூறியிருந்தார்.

ஜோதிட ரீதியாகவும், யானை குரு கிரகத்துடன் தொடர்புடைய சின்னம் என்பதால், அரசியலில் உயர்வு, மக்கள் ஆதரவு, நிலையான வெற்றி கிடைக்கும் என நம்பப்படுகிறது. கட்சியினர் நம்பிக்கை விசில் சின்னமும், யானை வடிவமைப்பும் இணைந்துள்ள நிலையில், “விஜய் வழிநடத்தும் இடத்திற்கு வருவதற்கான காலம் தொடங்கியுள்ளது” என்று தவெக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், எளிதில் புரியும் சின்னம், இளைஞர்களை கவரும் தன்மை, விஜயின் சினிமா இமேஜுடன் ஒத்திசைவு என பல காரணங்களால் ‘விசில்’ சின்னம் தவெக-க்கு சாதகமாக அமையலாம் என்று தெரிவிக்கின்றனர். 

‘விசில்’ சின்னம் விஜயின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக அமையுமா? என்பதை வரவிருக்கும் தேர்தல்கள் தான் தீர்மானிக்கப்போகின்றன.