கேலிக்கூத்தாக மாறிய திமுக–காங்கிரஸ் கேஸ் சிலிண்டர் போராட்டங்கள்? – பொதுமக்கள் விமர்சனம்
Gas Gas
ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையே உருவாகியுள்ள போர் பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் கடல் போக்குவரத்து மற்றும் எரிபொருள் வர்த்தகத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கு ஆசியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக சில கடல் வழிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், இந்தியாவிற்கு அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தற்காலிக தடைகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நாட்டில் போதுமான அளவு கையிருப்பு இருப்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள், நாட்டில் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்த போராட்டங்கள் அரசியல் நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன என பொதுமக்கள் சிலர் விமர்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. உலகளவில் நிலவி வரும் போர் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்வது சரியல்ல என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பரவலாக பதிவாகி வருகிறது.
மேலும், மத்திய அரசு மேற்கொண்ட தாராளமான பேச்சுவார்த்தைகளின் மூலம் முன்பு பாதிக்கப்பட்டிருந்த சில கடல் வழிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிய கப்பல்கள் இந்தியா நோக்கி பயணம் செய்து வருகின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய தகவல்கள் மத்திய அரசின் தரப்பில் நாடு முழுவதும் வெளியிடப்பட்டிருந்தாலும், இன்னும் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறி சில அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடுவது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
அசாதாரண சூழ்நிலைகளில் ஆளும் அரசுடன் இணைந்து ஆலோசனைகள் வழங்கி மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய எதிர்க்கட்சிகள், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது எவ்வாறு நியாயம் என பொதுநலவாதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், நாட்டில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் சமூக ஊடகங்கள் மூலம் உடனுக்குடன் மக்களுக்கு தெரிந்து விடுகிறது. இதனால் உண்மை நிலைகளை பொதுமக்கள் தாங்களே மதிப்பீடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் உண்மை நிலையை பொருட்படுத்தாமல் நடைபெறும் அரசியல் போராட்டங்கள் எதிர்க்கட்சிகளுக்கே எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
nadunilai.com