உதவித் தொகை வழங்குவதால் படிக்கும் மாணவ,மாணவியர் எண்ணிக்கை அதிகரிப்பு - முதல்வர் பெருமிதம்

M.K.Stalin

உதவித் தொகை வழங்குவதால் படிக்கும் மாணவ,மாணவியர் எண்ணிக்கை அதிகரிப்பு - முதல்வர் பெருமிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.12.2024) தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண் திட்டம்” விரிவாக்க விழாவில் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார். 

அப்போது அவர், தூத்துக்குடி – முத்து நகரம் மட்டுமல்ல, வீரபாண்டிய  கட்டபொம்மனின் வீரத்திற்கும் - மகாகவி பாரதியின் கவிதைத் தமிழுக்கும்-கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் தியாகத்திற்கும் சொந்தமான ஊர் இந்த ஊர். இப்படி பெரும் தலைவர்களுக்கும், பல பெருமைகளுக்கும் சொந்தமான இந்த தூத்துக்குடி மண்ணில், ”புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டம்” எனும் மகத்தான திட்டத்தைத் தொடங்கி வைக்கும் விழாவில் பங்கேற்றுள்ள மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் 

அருமை சகோதரி கீதா ஜீவன் அவர்களே!
மாண்புமிகு அனிதா ராதாகிருஷ்ணன்  அவர்களே!
மாண்புமிகு தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களே!

மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் என்னுடைய அருமை தங்கை கனிமொழி கருணாநிதி அவர்களே!

சட்டமன்ற உறுப்பினர்களே!

தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்களே!
அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், அவர்களே!
மாவட்ட ஆட்சித் தலைவர்  இளம்பகவத், அவர்களே!
வணக்கத்திற்குரிய மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே!
பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளே, அரசு அலுவலர்களே !
பத்திரிகை மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே !
தமிழ்நாடு முழுவதும் காணொலி மூலமாக இணைந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளே!

புதுமைப் பெண் திட்டத்தில் புதிதாக இணைந்து சாதனைப் படைக்க இருக்கும் என்னுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மகள்களே!
அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கம்!

இந்த அரங்கிலும், காணொலி காட்சியிலும் 657 கல்லூரிகளைச் சார்ந்த இத்தனை ஆயிரம் மாணவிகளைப் பார்க்கும்போது, ஒரு Dravidian Stock-ஆக நான் பெருமைப்படுகிறேன்! இதற்கு நேரெதிராக இன்னொரு Stock இருக்கிறது. நம்மை சாதி, மதம்-என்று சொல்லி, பிரிக்க நினைக்கும் Stock! வளர்ச்சியைப் பற்றி யோசிக்காமல், வன்முறை எண்ணத்தை தூண்டி விடும் வன்மம் பிடித்த Stock! பெண்கள் என்றால் வீட்டில்தான் இருக்க வேண்டும், கடைசிவரை ஒருவரை சார்ந்து இருக்க வேண்டும் என்று மனுவாத சிந்தனையை இந்தக் காலத்திலும் பேசிக்கொண்டு திரியும் Expiry-ஆன Stock இது! அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்து, இன்றைக்கு தமிழ்நாட்டு பெண்கள் இந்தியாவிலேயே Top-ஆக இருக்கிறீர்கள். மதிப்பெண் பெறுவதில் தமிழ்நாட்டுப் பெண்கள் டாப்!

நாட்டிலேயே உயர்கல்வியில் அதிகமாக சேருவதிலும், நீங்கள்தான் டாப்! அப்படி  உயர்கல்வியை முடித்து வேலைகளுக்கு செல்வதிலும் இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாட்டுப் பெண்கள்தான் டாப்! இந்தக் காட்சிதான், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் காண நினைத்த காட்சி!

ஒவ்வொரு குடும்பத்தில்  இருக்கும் பெண்களும் கல்லூரியில் படித்து - நல்ல வேலையில் சேர்ந்து - யாரையும் எதிர்பார்க்காமல் –தங்களின் சொந்த பொருளாதார வளத்தோடு இருக்க வேண்டும் என்று கருதியவர், தந்தை பெரியார். அது அவரின் கனவு!

மூடப்பட்டிருந்த கல்விக் கதவுகள் திறக்கப்பட்டு, நாம் எல்லாம் கல்விச் சாலைகளுக்கு வரத் தொடங்கியபோது, தந்தை பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? “பெருந்தலைவர் காமராசர் - கல்விக் கண்ணைத் திறந்தார். கலைஞர் அவர்களது ஆட்சி, எழுந்து நடக்க வைக்க வேண்டும்”-என்று  சொன்னார்! இன்றைக்கு, இந்த நிகழ்ச்சி, கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பெயரால் அமைந்த இந்த கல்லூரியில் நடப்பது மிக மிக பெருமைக்குரியது, மகிழ்ச்சிக்குரியது.

இன்றைக்கு கல்வியைப் பொறுத்தவரை பெண்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். ஆனால், 50 ஆண்டுகளுக்கு 
முன்பு – ஏன், 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலைமையா இருந்தது? சமூகரீதியாக, பாலினரீதியாக படிப்புக்கு தடைக்கற்கள் இருந்தது.
1911-ஆம் ஆண்டு எழுத்தறிவு பெறாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 94 விழுக்காடு! 1921-இல் 92 விழுக்காடு! இந்தியப் பெண்களில் நூறு பேரில் இரண்டு பேருக்கு மட்டும்தான் அன்றைய காலத்தில் எழுத, படிக்கத் தெரியும். பள்ளிகளும்,  கல்லூரிகளும் இந்தளவுக்கு இல்லை!

பெண்களைப் படிக்க வைத்தால்  பண்பாட்டை இழந்து விடுவார்கள் என்ற மூடத்தனமும் பிற்போக்குத்தனங்களும்  கோலோச்சிய காலம் அது. அதை மாற்றி, படித்தால் அறிவு வரும், தன்னம்பிக்கை வரும் என்று புரிய வைத்து, கல்விக்கனவை எல்லோருக்கும் திறந்துவிட்ட ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி!
9.3.1923 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டு, அதன்படி, அனைத்து மக்களுக்கும் கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும் என்று சட்டம் ஆக்கியது நீதிக்கட்சி அரசு. இந்தியத் துணைக் கண்டத்தில் நீதிக்கட்சி ஆட்சிதான் முதன்முதலாக அனைவருக்கும் கல்வி என்பதை சட்டமாக்கியது. 

பட்டியலின மாணவர்களைக் கட்டாயமாக எல்லாப் பள்ளிகளிலும் சேர்க்க வேண்டும், மறுக்கும் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் நிதி வழங்கப்படாது என்று சட்டம் இயற்றினார்கள். இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், வந்த பாதையை மறக்காமல் இருந்தால்தான் வழிதவறிவிடாமல் முன்னேறிப் போக முடியும்! இதெல்லாம் தெரியாமல் இருப்பதால்தான், என்ன செய்தது திராவிடம் என்று சிலர் அறியாமையில் கேட்கிறார்கள்! அவர்களுக்காகத்தான் இதை சொல்கிறேன்! 

கல்விக்காக ஏராளமான முன்னெடுப்புகள் நீதிக்கட்சி ஆட்சியில்தான் எடுக்கப்பட்டது. பெண்களுக்கு எட்டாம் வகுப்புவரை இலவசக்கல்வி!  பெண்களுக்கு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டு, அவர்களுக்கு உதவித்தொகை என்று அந்தப் பட்டியல் நீளமானது! 
இதையெல்லாம், அன்றைய  சென்னை மாகாணமான  தமிழ்நாட்டில், கல்விப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தது.  பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில்  அதிகப்படியான பள்ளிகள்  திறக்கப்பட்டது. 

அடுத்து, 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய அந்த அரசியல் புரட்சி, அடுத்து வந்த எல்லாவிதமான மாற்றங்களுக்கும் அடித்தளமாக அமைந்தது! பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் கல்லூரிக் கல்வியில் அதிகப்படியான கவனத்தை செலுத்தினார்.
விடுதலை பெற்ற 1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டுகளில்  திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகள் எத்தனை தெரியுமா? 68! ஆனால், தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த 1969 முதல் 1975 காலக்கட்டத்தில் மட்டும் 97 அரசுக் கல்லூரிகளை  திறந்தார்.

புகுமுக கல்லூரி வகுப்பு வரை இலவசக் கல்வி-என்று கலைஞர் அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கானோர் பள்ளிகளை நோக்கி  வந்தார்கள். தலைவர் கலைஞர்தான், மருத்துவம், சட்டம், தமிழ் இணையம், கால்நடை ஆகியவற்றிற்கு தனித்தனி  பல்கலைக் கழகங்களை  உருவாக்கினார்.  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், சேலம் பெரியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். ஏராளமான  மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி, தலைசிறந்த மருத்துவக் கட்டமைப்புக்கு வித்திட்டார். அதனால்தான் இந்தியாவிலேயே மருத்துவர்கள் விகிதத்தில் தமிழ்நாடு நம்பர் ஒன்றாக இருக்கிறது.

இந்த வரிசையில், கல்லூரிக் கல்விக்கும், உயர்கல்விக்கும், ஆராய்ச்சிக் கல்விக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
பெண்களுக்கு நேரடியாக பணத்தை கொண்டு சேர்த்து, அவர்களுக்கான பொருளாதார விடுதலையையும் சமூக விடுதலையையும் உறுதி செய்கிறோம்!

“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்” மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். அதை அவர்கள் குழந்தைகளுக்கான செலவு, சிறு சேமிப்புகள், முதலீடு செய்கிறார்கள்!
படிப்புக்காகவும் வேலைக்காகவும் வெளியூருக்குப் செல்லும் பெண்கள், தினசரி பயணத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் செலவிட வேண்டிய அவசியம் இருக்கும்!

அந்தச் சுமையையும் குறைத்து, கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தினால் இதுவரை 527 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் வெளியூரில் பாதுகாப்பாக எல்லா வசதிகளுடன் தங்குவதற்கு தோழி விடுதிகள்! மகளிர்  சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி என்று  எண்ணற்ற மகளிர் நலத் திட்டங்களை இன்றைக்கு  நிறைவேற்றிக்கொண்டு வருகிறோம். 

இந்த வரிசையில்தான் புதுமைப் பெண் திட்டத்தையும்  உருவாக்கினேன். இது 2021 தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படாத திட்டம்! பெரும் அளவில் தொடர்ந்து நிதி ஒதுக்க வேண்டிய, தேவையுள்ள திட்டம்! ஆனாலும் இதைத் தொடங்கியாக வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ஏன் தெரியுமா? தமிழ்நாட்டில்  அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்க்கல்வி  சேர்க்கை  குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்களைப் பார்த்தேன்.

மேல்படிப்பு படிக்க திறமையும், மனசும் இருந்தாலும் பணம் இல்லாததால் படிப்பை கைவிடுகிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு வருத்தமடைந்தேன். அப்போதுதான், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப்பெண் திட்டத்தை நான்  உருவாக்கினேன்.   இதனால், அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுவருகிறது. 

முதற்கட்டமாக, 5.9.2022-இல் வடசென்னை பாரதி மகளிர் கல்லூரியிலும், இரண்டாம் கட்டமாக 8.2.2023-இல்  திருவள்ளூர் பட்டாபிராமில் இருக்கும் இந்து கல்லூரியிலும் துவக்கி வைத்தேன். புதுமைப் பெண் திட்டம் தொடங்கிய காலத்திலிருந்து, தற்போது 
வரை கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவக் கல்லூரிகளில்  படிக்கும் மாணவிகள் உட்பட சுமார் 4 இலட்சத்து 
25 ஆயிரம் மாணவிகள் பயனடைந்திருக்கிறார்கள்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல், மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக 590 கோடியே 66 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

இதை அரசுக்கு செலவினமாக கருதாமல், ஒரு தந்தைக்குரிய கடமையாக, பெண் குழந்தைகளுடைய கல்விக்கான மூலதனமாக தான் நான் பார்க்கிறேன்.  சில நாட்களுக்கு முன்பு, இங்கே தலைமைச் செயலாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னார். மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள் ஒரு அறிக்கையை கொண்டு வந்து என்னிடம் வழங்கினார். அதில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் எந்தளவுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்று ஆய்வு முடிவுகளை எல்லாம் அதில் சொல்லி இருந்தார்கள்.

புதுமைப் பெண் திட்டத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று நான் ஆர்வமாக எடுத்துப் பார்த்தேன்.  அதைப் படித்தபோது, எனக்கு மனநிறைவாக இருந்தது.  மாதம்தோறும் நாம் ஆயிரம் ரூபாய் வழங்குவதால் ஆண்டுக்கு ஆண்டு கல்லூரிகளில் மாணவிகள் கூடுதலாக சேரத் தொடங்கி இருக்கிறார்கள் என்கின்ற விபரம் அந்த அறிக்கையில் இருந்தது. 
நாங்கள் இந்தத் திட்டத்தை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டது என்று நான் பெருமைப்பட்டேன்.  பணமில்லாமல் படிப்பை நிறுத்தினால், பல்லாயிரம் மாணவியர், கல்லூரிகளை நோக்கி வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

உங்களுடைய படிப்புக்குப் பணம் மட்டுமல்ல, எந்தத் தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன்!   மாணவிகளுக்கு மட்டும்தானா?   மாணவர்களுக்கு இல்லையா? என்று மாணவர்கள் கேட்டார்கள்.  முந்தைய ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்பட்ட நிதி நெருக்கடி ஒரு பக்கம்; ஒத்துழைப்பு தராத ஒன்றிய அரசு என்று ஏற்படுத்துகின்ற சிக்கல்கள் அது ஒரு பக்கம்; ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல், மாணவர்களுக்காக, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்!

எந்த அப்பாவும், தன்னுடைய பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு கணக்கு பார்க்க மாட்டார்கள்! அப்படித்தான் உயர் கல்விக்கான, திட்டங்கள் என்றால், எந்த நெருக்கடி இருந்தாலும் அதை நிறைவேற்றியே தீருவேன்.  கடந்த 9.8.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில், அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். அதைத் தொடங்கியதில் இருந்து சுமார் 

3 லட்சத்து 52 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இன்று வரை மாணவர்களுக்கு உதவித்தொகையாக 143 கோடியே 41 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

360 கோடி ரூபாயை இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்திருக்கிறோம். அடுத்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மட்டும்தானா?  அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு கிடையாதா? என்று ஒரு கோரிக்கை வைத்தார்கள்.  அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து,  உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற வகையில்   இன்றைக்கு புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறோம். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு முழுவதும் சுமார் 75 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப் போகின்றோம்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி" எனப் புதுமைப் பெண்கள் குறித்து பாரதி கண்ட கனவை   புதுமைப் பெண் திட்டம் மூலமாக நம்முடைய திராவிட மாடல் அரசு நனவாக்கியிருக்கிறது.

இதன் நோக்கம், பள்ளியின் படிப்பை நிறுத்த வேண்டிய சூழலில் இருக்கின்ற மாணவிகளுக்கு  நம்முடைய ஆட்சியில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், அவர்கள் கல்லூரிக்குள் நுழைகிறார்கள்.  ஒரு ஆண் கல்லூரிக்குள் நுழைந்தால், அது கல்வி வளர்ச்சி!  அதுவே ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால், அது சமூகப் புரட்சி!

அந்த வகையில், புதுமைப் பெண் திட்டத்தால், தமிழ்நாட்டில் உயர்கல்வியை முடிக்கின்ற பெண்களின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகமாகும்.   அறிவுத்திறன் கூடும். திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள்.  அதன் காரணமாக நம்முடைய தமிழ்நாட்டை தேடி,  உலகின் முன்னணி நிறுவனங்கள் தொழில் தொடங்க வருவார்கள்.  ரொம்ப முக்கியமாக, பாலின சமத்துவம் ஏற்படும். குழந்தை திருமணங்கள் குறையும்.  பெண்கள் அதிகாரம் பெறுவார்கள்.  பெண்களின் படிப்பால், அவர்களின் தலைமுறையே காக்கப்படும்.

இந்த ஒரு திட்டத்தால் இத்தனை பயன்கள் கிடைக்கிறது.  “கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்” என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.  உயர்கல்வி பெறாத பெண்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்காமல் நான் ஓயமாட்டேன்!

நான் என்றால் தனிப்பட்ட நான் கிடையாது! என்னை இயக்கும் தலைவர்களும்,  அவர்கள் என்னுள் விதைத்திருக்கின்ற கொள்கைகளும்தான் காரணம்! நம்முடைய திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு வகையில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக அமைகிறது.

அப்படியான திட்டம் தான்,  'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்'.  சுமார் 20 இலட்சம் பள்ளி குழந்தைகள் பசியின்றி சுவையான காலை உணவை சாப்பிடுகிறார்கள்! அதுமட்டுமல்ல, கடந்த மாதம் நம்முடைய மாண்புமிகு பிரதமர் அவர்கள் தலைமையில் நடந்த தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில், என்னுடைய கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தை அனைவரும் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். பெரிய பாராட்டையும் பெற்றிருக்கிறது!

தமிழ்நாட்டு இளைஞர்களை திறன்மிக்கவர்களாக உயர்த்துகின்ற “நான் முதல்வன்” திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! இப்படி பல்வேறு திட்டங்களை உங்கள் எதிர்காலத்திற்காக செயல்படுத்துகிறோம்.

புதுமை பெண்களே! உங்களிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, படியுங்கள், படியுங்கள், படியுங்கள்!  படிப்பில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். உங்களுக்குத் தேவையான, எல்லாவற்றையும் செய்து தர நான் இருக்கிறேன்! நம்முடைய அரசு இருக்கிறது! ஒரு பட்டத்தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!  மேலும், மேலும் உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி வரை படியுங்கள்!  உங்கள் தகுதிக்கேற்ற வேலைகள் உறுதியாக உங்களுக்கு கிடைக்கும்.  இது போட்டிகள் நிறைந்த உலகம். அதனால, பட்டங்களைக் கடந்த தனித்திறமைகள் அவசியம். திருமணத்துக்குப் பிறகும், வீட்டில் முடங்கிடாமல் வேலைகளுக்குச் சென்று பணியாற்றுங்கள்.  உங்கள் கல்வி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மட்டும் பயன்தரக்கூடியதாக இருக்கக் கூடாது. சமூகம் உங்களால் பயனடைகின்ற அளவுக்கு நீங்கள் உயரங்களை அடையவேண்டும்!

இன்றைக்கு ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய நீங்கள், நாளை உங்களைப் போல பலருக்கு உதவவேண்டும்; வழிகாட்டவேண்டும்!  என்றாவது ஒருநாள் என்னைச் சந்தித்து, “புதுமைப் பெண் திட்டத்தால் பயன் பெற்ற நான் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன்”என்று சொன்னால், அதுதான் எனக்கு பெருமகிழ்ச்சி! எனக்குப் பெரிய பெருமை!  என்னுடைய காலத்துக்குப் பிறகும், என் பேர் சொல்லும் பிள்ளைகளாக நீங்கள் எல்லாம் இருக்கவேண்டும்!

புதுமைப் பெண்களாம் என் மகள்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து விடைபெறுகிறேன் என்று பேசினார்.