விடுதலைக்காக முதல் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் இன்று.!
kattapomman news
தெற்கு சீமையில் பாளையமாக திகழ்ந்த தற்போது தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சலாங்குறிச்சியில் கி.பி 1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி அன்று ஜெக வீரபாண்டிய கட்டபொம்மன் - ஆறுமுகத்தம்மாள் தம்பதியின் முத்த மகனாக பிறந்தார் கட்டபொம்மன். இவருடன் ஊமைத்துரை என்ற சகோதரனும், சக்கம்மாள் என்ற சகோதரியும் பிறந்தவர்கள் ஆவர். வீரபாண்டிய கட்டபொம்மனின் இயற்பெயர் வீரபாண்டியன். கட்டபொம்மன் என்பது தெலுங்கில் வீரம் நிறைந்தவன் என்று அர்த்தம். அப்படித்தான் வீரபாண்டியன் கட்டபொம்மன் என்று விளங்கினார்.
பல மன்னர்கள் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி வந்த நிலையில், தனது 30 வயதில் அரியணை ஏறிய கட்டபொம்மன் இதை எதிர்த்தார். கட்டபொம்மன் அந்நிய தேசத்திலிருந்து வந்த ஆங்கிலேயர்களுக்கு இந்த மண்ணில் பிறந்த நான் ஏன் கப்பம் கட்ட வேண்டும் ? என்று ஆங்கிலேயரை எதிர்த்து முழக்கமிட்டார். இதுதான் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் முழக்கம் என்று கூறப்படுகிறது.
கட்டபொம்மன் வீரர் மட்டுமில்லை, சிறந்த முருகன் பக்தரும் கூட. திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜை முடிந்த பிறகுதான் எந்த வேலையும் உணவு சாப்பிடுவாராம். எனவே பூஜை நடக்கும் விபரம் அறிய திருச்செந்தூரிலிருந்து பாஞ்சலாங்குறிச்சி வரை இடையில் மணி கட்டி சப்தம் எழுப்பும் வகையில் சாரங்கள் கட்டியிருந்தார். மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 300கி வெண்கலமணியை கொடுத்திருக்கிறார். அது இன்றும் முருகன் கோவிலில் இருக்கிறது. கோயிலின் உள்ளே கட்டபொம்மன் பயன்படுத்திய நினைவுச்சின்னங்களும் இருக்கின்றன.
ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்படாமல் எதிர்த்து நின்ற கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே மோதல் முற்றியது. அதனால் கி.பி 1790 -ல் இரு தரப்பிற்கும் இடையே போர் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் ஆங்கிலேயரின் பீரங்கி குண்டுகளும், தூப்பாக்கி தோட்டாக்களும் கட்டபொம்மனை நிலைகுலைய செய்தது. அதனால் தனது தம்பி ஊமத்துரையுடன் தலைமறைவனார். புதுக்கோட்டை காட்டுபகுதியில் ஒழிந்து வாழ்ந்த கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையை புதுக்கோட்டை மன்னர் சேதுபதி விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயருக்கு பயந்து காட்டிகொடுத்துவிட்டார். அதனால் ஆங்கிலேய அரசு கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும் கைது செய்தது. இதில் ஊமைத்துரையை சிறையில் அடைத்துவிட்டு கட்டபொம்மனை கயத்தாரில் உள்ள ஒரு புளியமரத்தில் தூக்கிலிட்டனர். பின்னர் சிறையில்ருந்து தப்பிய ஊமைத்துரை மீண்டும் கோட்டையை கட்டினார். பின்னர் அதையும் ஆங்கிலேயர் இடித்தனர். ஊமைத்துரையை மீண்டும் சிறையில் அடைத்தனர். அதன்பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற ஒரு சகாப்தம் முடிவுற்றது.
கடந்த 1972ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் இன்று உள்ள கட்டபொம்மன் கோட்டையும் அவர்களின் சந்ததியினர் குடியிருக்க வீடும் கட்டி கொடுக்கப்பட்டது. இன்று உள்ள கட்டபொம்மன் கோட்டை சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
மேலும் கோட்டையின் உள்ளே உள்ள சக்கதேவி கோயில் சமுதாயகோவிலாகவும் உள்ளது. கட்டபொம்மனின் வாரிசுதாரர்கள் இன்றும் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ளனர். இதில் நேரடி வாரிசு ஜெகவீர பாண்டியனை இன்றும் நேரடியாக பார்க்கலாம். இவர்களில் பல பிரிவினர் இருந்தாலும் காட்டு நாயக்கர் என்ற பிரிவினர் இன்றும் சக சமுதாய பழக்கவழக்கங்களுக்கு இணையாக கல்வி, பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது.
வாழ்ந்து மறைந்த தியாகிகள், தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுபோல் கட்டபொம்மன் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை நினைவு கூறுவோரின் எண்ணிக்கை குறைவுதான். இதில் செண்டிமெண்ட் பார்க்கப்படுகிறது என்கிறார்கள்.
nadunilai.com