தூத்துக்குடிக்கு கேந்திர வித்யாலயா பள்ளி வேண்டும் - மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை

N.P.Jegan

தூத்துக்குடிக்கு கேந்திர வித்யாலயா பள்ளி வேண்டும் - மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை

தூத்துக்குடியில் ஐஐடி, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தேர்தல்  அறிக்கை தயாரிப்பு குழுவிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.  

தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் இடம்பெற வேண்டிய தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கபட்டிருக்கிறது. இந்த குழுவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொழில் முனைவோர், தொழிற்சங்கத்தினர், உற்பத்தியாளர்கள், வணிகர்கள் ஆகியோர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் கனிமொழி எம்.பி தலைமையிலான குழுவினர் தூத்துக்குடி வருகை தந்த போது பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை மனுக்களாக வழங்கினர். அவர்களிடம் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியும் மனு கொடுத்தார்.

அதில், தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விஎம்எஸ் நகரில் 5வது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி துறைமுகம் பைபாஸ் ரோட்டில் மீன் வளக்கல்லூரிக்கு எதிரே அரசுக்கு சொந்தமான இடத்தில் சர்வதேச கருத்தரங்கு, கண்காட்சி போன்றவை நடத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய வர்த்தக மைய வளாகம் அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு குளத்தூர்,விளாத்திகுளம்,அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், 

 தொழில் நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள துறைமுக நகரமான தூத்துக்குடி நகரில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ரயில் இயக்கவும், துறைமுகம், விமானநிலையம், சிஆர்பிஎப், கனநீர் ஆலை, விரைவில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம் போன்ற ஒன்றிய அரசு நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள மாவட்டமாக விளங்கும் தூத்துக்குடியில் ஐஐடி போன்ற உயர் தொழில் கல்வி நிறுவனக்கள், கேந்திர வித்யாலயா பள்ளிகள் துவங்கவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருக்கிறார் மேயர்.