இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் 40 குடியிருப்புகள் - அமைச்சர்கள் முன்னிலையில் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்

Thoothukudi collector

இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் 40 குடியிருப்புகள் - அமைச்சர்கள் முன்னிலையில் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் குளத்துள்வாய்பட்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.03 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான்  முன்னிலையில் இன்று (05.02.2024) தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். 

அப்போது கனிமொழி, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் இலங்கையில் இருந்து வந்து வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய சகோதர, சகோதரிகளுக்கு இருக்கக்கூடிய அந்த வாழ்விடங்களில் போதிய இடம் இல்லாத நிலையை புரிந்துகொண்டு  ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு கட்டி தந்திருக்கிறார். இந்த நாட்டிலே பிறந்து இங்கே வசிக்கக்கூடிய மக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ அதையெல்லாம் தாண்டி தமிழ்நாடு அரசால் எதையெல்லாம் செய்து தர முடியுமோ அதை உங்களுக்கு செய்து தந்திருக்கக்கூடிய முதலமைச்சர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்திலே தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பான நிலையை பேசுவதற்கு வாய்ப்பு கேட்டாலும் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் இருக்கின்ற இலங்கை தமிழர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு எப்படி உரிமைகள் வழங்கப்படுகிறது என்பதை ஐக்கிய நாடுகள் சபை மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. வேலைவாய்ப்புக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் உங்களுக்கு குடியுரிமை வேண்டும் என்று நினைக்கின்றவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு நிச்சயமாக விரைவிலேயே குடியுரிமை பெற்று தருவதற்கான முயற்சியில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இங்குள்ள சமூகநலக்கூடத்தினை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் அங்கு படிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் உங்களது திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். 

இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது,  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அதனடிப்படையில் உடனடியாக குடியிருப்புகளை அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.  தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே தாப்பாத்தியில் முதல்கட்டமாக 52 குடியிருப்புகளை திறந்து வைத்துள்ளார்கள். தற்போது இரண்டாம் கட்டமாக குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் குளத்துள்வாய்பட்டியில் 40 வீடுகள் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளையூரணியில் 60 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அவை திறந்து வைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் இவ்வாறு வீடுகள் மட்டுமின்றி பேவர் பிளாக் சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி, பொது சுகாதார வளாகம் என்று உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்கள் என்றார். 

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் பேசும்போது, ’’உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக அனைவரின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முத்தமிழறிஞர் கலைஞர் இலங்கை மக்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி தமிழ்நாட்டிற்கு வருகின்ற நேரத்தில் அவர்களை தாயுள்ளத்தோடு வரவேற்று பாதுகாப்பளித்து அன்றுமுதல் இன்று வரை தமிழகத்தின் சார்பாக அவர்களை கட்டிக்காக்கின்ற ஒரு மாபெரும் பொறுப்பை ஐந்து முறை முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் தமிழ் மக்களுடைய வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அவர் வழிவகுத்த அந்த திட்டங்களை எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் கடல்தான் நம்மை பிரித்திருக்கிறது, தமிழ் என்ற உள்ளங்கள் அனைவரையும் இணைந்திருக்கிறது என்ற அடிப்படையில் உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் பாதுகாப்பிற்காக ஒரு நலவாரியம் மற்றும் ஒரு துறையை அமைத்து  அந்த துறையின் மூலமாக இன்றைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இலங்கை தமிழர்கள் வாழ்கின்ற முகாமிற்கு அகதிகள் முகாம் என்ற பெயரை அப்புறப்படுத்தி நான் உங்களின் ஒருவனாக இருக்கின்றேன், உங்கள் சகோதரனாக இருக்கின்றேன் எனக்கூறி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் சூட்டி பெருமைப்படுத்தினார்.  அதுமட்டுமல்லாமல் இரண்டு கட்டங்களாக 3500 வீடுகளும், இப்போது 3900 வீடுகளும் கட்டுகின்ற பணிகளும் இரண்டு கட்டங்களாக சிறுபான்மையினர். நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பாக நடைபெற்று வருகிறது.  இந்த இரண்டு கட்ட பணிகளும் சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் 106 முகாம்களில் 20000 குடும்பங்களும், 60000 மக்கள்தொகையும் குடிநீர்  சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பல்துறை திட்டங்களை அறிவித்து அந்த குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவருக்கு மாதம் ரூ.1500ம், குடும்பத்தோடு 12 பேர்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1000-ம், 12 வயதுக்கு குறைவாக இருப்பவர்களுக்கு ரூ.500ம் என ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.4000, ரூ.3500 என்ற அளவில் மாத பணிக்கொடை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தில் இந்த முகாமில் இருக்கின்ற மக்களையும் இணைத்து ரேசன் கடை மூலம் கொடுக்கின்ற பொருட்கள் அல்லாமல் கூடுதல் அரிசி கொடுப்பதற்காக விலை நிர்ணயித்திருந்த காலத்தை மாற்றி சென்ற ஆண்டில் இருந்து விலையில்லா கூடுதல் அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமால் 5 எரிவாயு உருளைக்கு ரூ.400 மானியம் வழங்கக்கூடிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர்  மேற்கொண்டு வருகிறார். மேலும் கல்வி உதவித்தொகை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதை காட்டிலும் 4 மடங்கு கூடுதலாக வழங்கியிருக்கிறார். பாத்திரங்கள், உடைகள், தொழிற்கல்வி செலவு, தாயகம் திரும்புவதற்கு விரும்புவர்களுக்கு உதவி என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார். முதல்கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் வேலூரில் இலங்கை தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் குடியிருப்புகளை திறந்து வைத்தன் தொடர்ச்சியாக இன்று இங்கு திறந்து வைக்கப்படுகின்றன. கு முகாமில் இருக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வதற்காக சுய உதவிக்குழுக்களை உருவாக்கி மானியம் வழங்குவதற்கான நிலையை முதலமைச்சர் உருவாக்கியிருக்கிறார். இங்கு சுயஉதவிக்குழுக்கள் தொழில் செய்வதற்கு ஒரு கட்டிடத்தையும் தந்திருக்கிறார். உங்களுக்கு குடியுரிமை தருவதற்கான சட்ட திருத்தம் செய்வதற்கு ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள முகாம்களில் இருந்து 200 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்திற்கு செல்லலாம், கல்வி பயில்வதற்கு செல்லலாம் என்ற நிலையை உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உங்களின் சார்பாகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறையின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார். 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன்பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ஆர்.ஐஸ்வர்யா, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை துணை இயக்குநர் ரமேஷ், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கமாரியம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜவஹர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

சமீபகாலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் மாவட்ட அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோரை தாண்டி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. அரசு கல்வெட்டுகளில் எம்.பியின் பெயர் முதலிலும், அடுத்தடுத்துதான் அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன. அமைச்சர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர் போல் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி தெரிகிறார். அதாவது 6 சட்ட மன்ற தொகுதிகளை உள்ளடக்கியது நாடாளுமன்ற தொகுதி. அப்படியானால் சட்ட மன்ற உறுப்பினர்களைவிட நாடாளுமன்ற உறுப்பினர் அதிகாரம் படைத்தவராக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அதேவேளை, 234 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக அமைச்சர்கள் இருக்கும்போது அவர்களை எப்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு  அடுத்தப்படியாக வைத்து பார்க்க முடியும்?. கட்சித்தலைவரின் மகள், கட்சித்தலைவரின் தங்கை என்பதையும் தாண்டி மாநில மகளிர் அணி நிர்வாகி என்று  பார்க்கும்போது அவரை, மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை கூறும் இடத்தில் வைத்து பார்க்கலாம். அதுவே ஆட்சி பொறுப்பென்று வரும்போது, அவர்கள் அமைச்சர்கள், இவர் நாடாளுமன்ற உறுப்பினர் அவ்வளவுதான். 

தூத்துக்குடி அரசு நிர்வாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்கிறபோது சமத்துவம், சம உரிமை,சமூகநீதி என்றெல்லாம் பேசும் ஒருவர், தானாக முன் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்பாளர் என்கிற நிலையோடு நின்று கொள்வது நல்லது. அதை அவரே அரசு நிர்வாகத்தில் நடைமுறைபடுத்த வேண்டும்.. மரபுகளை மீறுவதுதான் இவர் படித்த அரசியலோ என்று கேள்வி கேட்கிறார்கள் பொதுமக்கள்.