எடப்பாடி – தினகரன் சந்திப்பு உணர்ச்சி அலைகளை எழுப்பியது

Pagai - Enaippu

எடப்பாடி – தினகரன் சந்திப்பு உணர்ச்சி அலைகளை எழுப்பியது

வாழ்க்கையில் “விட்டுக் கொடுப்பது” என்பது எளிதில் உருவாகும் மனநிலை அல்ல. பெரும் பக்குவம், தவிர்க்க முடியாத சூழல் அல்லது காலத்தின் கட்டாயம் உருவாகும் போதே அந்த மனநிலை பிறக்கிறது. தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, அரசியல் களத்திலும் இதே உண்மை பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழக அரசியலில் நீண்ட காலமாக நிலவி வந்த ஒரு முக்கியமான பிரிவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு இடையேயான நீண்ட நாள் அரசியல் பிணக்கு, இன்று நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் அறிமுக கூட்டத்தில் உருகும் உணர்ச்சிகளுடன் முடிவுக்கு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த கூட்டத்தில், இருவரும் ஒரே மேடையில் இணைந்து பேசிக் கொண்டது அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை பெற்றது.

ஒருகாலத்தில் கடும் அரசியல் பகையர்களாக பார்க்கப்பட்ட இந்த இருவரும், இன்று ஒருவரை ஒருவர் உரிமையோடு அணுகி, கைப்பிடித்து பேசிக் கொண்ட காட்சிகள் பலரின் மனதை நெகிழ வைத்தது. குறிப்பாக, டிடிவி தினகரன் உணர்ச்சி பூர்வமாக பேசியதும், அதற்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி அவருடன் நெருக்கமாக உரையாடியதும், அரசியல் எல்லைகளைத் தாண்டி மனித உறவுகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டியது.

சாதாரண வாக்குவாதங்கள் கூட நண்பர்கள், உறவினர்களை வருடக்கணக்கில் பிரித்து வைக்கும் சமூக சூழலில், “யார் முதலில் விட்டுக் கொடுப்பது” என்ற ஈகோ தடையை உடைத்து இந்த அரசியல் இணைப்பு நிகழ்ந்துள்ளது என்பதே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பேசிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தும், தன்மானம் என்ற பெயரில் விலகி நிற்பவர்களுக்கு, இந்த நிகழ்வு ஒரு மனநிலை பாடமாகவே பார்க்கப்படுகிறது.

இதன் பிரதிபலிப்பாக, சமூக வலைதளங்களில் பலரும் தங்களது தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். பழைய பகையால் பிரிந்து வாழும் நண்பர்கள், உறவினர்கள், “ஒரு நாள் இப்படி இணையும் தருணம் நமக்கும் வர வேண்டும்” என்ற ஏக்கத்தை இந்த நிகழ்வு தூண்டியுள்ளதாக கருத்துகள் வெளியாகி வருகின்றன.

அரசியல்வாதிகள் என்ற அடையாளத்திற்குள் இந்த சந்திப்பை சுருக்கி விமர்சிப்பவர்கள் இருந்தாலும், பகை, பிரிவு, பின்னர் இணைப்பு என்ற மனித மனநிலையின் இயல்பை வெளிப்படுத்தும் சம்பவமாகவே இந்த எடப்பாடி–தினகரன் இணைப்பு பரவலாக பேசப்பட்டு வருகிறது. தமிழக அரசியலில் இது ஏற்படுத்தப் போகும் தாக்கம் மட்டுமல்ல, சமூக ரீதியான உளவியல் தாக்கமும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.