துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் கட்டாயம் : முதல்வர் கடிதம் – அரசியலா, அவசியமா?

M.k.stalin

துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் கட்டாயம் : முதல்வர் கடிதம் – அரசியலா, அவசியமா?

துணை மருத்துவப் படிப்புகளுக்கு (Paramedical Courses) நீட் தேர்வு கட்டாயம் என்பதை கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் தீவிர விவாதம் எழுந்துள்ளது.

இந்த நடவடிக்கையை சிலர் மாணவர் நலன் சார்ந்த அவசியமான முயற்சி என வரவேற்க, பெரும்பாலான விமர்சனங்கள் இதை வெறும் அரசியல் நாடகம் என விமர்சிக்கின்றன. குறிப்பாக, ஆட்சியின் இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் மீண்டும் நீட் விவகாரத்தை முன்னிறுத்துவது தேவையற்றது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு இதற்கு முன் பல்வேறு கட்ட போராட்டங்கள், சட்டமன்ற தீர்மானங்கள், ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதா உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்தும் நடைமுறை வெற்றியை பெறாத நிலையில், தற்போது மீண்டும் கடிதம் எழுதுவது எதற்காக என்ற கேள்வி எழுந்துள்ளது. 
தேசிய அளவிலான நடைமுறை நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக அமலில் உள்ளது. பல மாநிலங்கள் இதனை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், “தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் விலக்கு?”
என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. 
நீட் ஆதரவாளர்களின் வாதம்
நீட் தேர்வு மூலம் கிராமப்புற, ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுகின்றனர்
தனியார் கல்வி நிறுவனங்களின் தலையீடு குறைந்துள்ளது
மதிப்பெண் அடிப்படையில் சம வாய்ப்பு உருவாகியுள்ளது
என்று பல பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறி வருவதாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீட் எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடு
இதற்கு மாறாக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்:
நீட் தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது
மாநில பாடத்திட்ட மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்
பயிற்சி மையங்களின் ஆதிக்கம் அதிகரிக்கிறது
என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக நீட் குறித்து இருதரப்பு வாதங்களையும் கேட்டுவரும் பொதுமக்கள், எது மாணவர்களுக்கு உண்மையில் நல்லது? என்ற குழப்பத்தில் உள்ளனர். இருப்பினும், நீட் நடைமுறையில் இருக்கும் உண்மையை உணர்ந்து, பெரும்பாலான மாணவர்கள் அதற்கான பயிற்சிகளை தேர்ந்தெடுத்து முன்னேறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி ஆகியோர் அரசியல் லாபத்தை விட மாணவர் நலனை முன்னிலைப்படுத்தி, ஒருமித்த முடிவை எடுப்பதே சரியான வழி என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தேர்வை தமிழ்நாடு மட்டும் மறுப்பது நடைமுறைக்கு ஏற்றதா என்ற கேள்வியும் வலுவடைந்து வருகிறது.