தூத்துக்குடி அருகே மனைவியை கொடூரமாக வெட்டிய கணவன் - பெண்கள் வன்முறைக்கு எதிராக பேனர் பிடித்த சிறிது நேரத்தில் சம்பவம்
Thoothukudi news
அகிம்சையை போதித்த காந்தி மஹான் நினைவு நாளில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு திரும்பிய பெண் கொடூரமாக வெட்டப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. மகளிர் குழுவில் தன் மனைவி வேலை பார்ப்பதை விரும்பாத கணவர், அவரை கொடூரமாக வெட்டிசாய்த்திருக்கிறார். தூத்துக்குடி அருகே கோரம்பள்ளத்தில்தான் அப்படியொரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கேடிகே நகரை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் பொன்தங்கம் என்கிற குணா. இவருக்கும் புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிகுளத்தை சேர்ந்த அமராவதி (28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அமராவதி மகளிர் சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்தார். அதனால் அவர் பணிநிமித்தமாக அடிக்கடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட வெளியிடங்களுக்கு சென்றுவருவது வழக்கம். இது குணாவிற்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதின் காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அமராவதி அல்லிகுளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். குணா வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று(30.01.2024)தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் முதல் ஆளாக நின்றுள்ளார். அங்கு வந்த குணா, அமராவதியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும்,அங்கு நின்றவர்கள் அவரை சத்தம்போட்டு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
மதியம் தனது தோழி கல்பனா என்பவரின் ஸ்கூட்டியில் அமராவதி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவர்கள் தூத்துக்குடி-பாளை நெடுஞ்சாலையில் கோரம்பள்ளம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அமராவதியின் தோழி, ஸ்கூட்டியை அங்குநிறுத்திவிட்டு அங்குள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்க சென்றிருக்கிறார். ஸ்கூட்டி அருகே அமராவதி தோழிக்காக காத்து நின்றிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த அமராவதியின் கணவர் குணா அரிவாளால் அமராவதி கழுத்தின் பின்பகுதியில் ஓங்கி வெட்டியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த அமராவதி ரத்த வெள்ளத்தில் மொபட் மீது சரிந்து விழுந்தார். இதனை பார்த்த கல்பனா அருகில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திற்குள் ஓடி தப்பித்தார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த ஆம்புலன்ஸ் மூலம் அமராவதியை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு போராடி வரும் அமராவதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்தங்கம் என்கிற குணா மற்றும் அவருடன் வந்தவர்களை தேடி வருகின்றனர்.