கூட்டாம்புளி டாஸ்மாக் கடை அருகே அடுத்தடுத்து நடந்த தகராறில் வாலிபர் வெட்டி கொலை

Murder News

கூட்டாம்புளி டாஸ்மாக் கடை அருகே அடுத்தடுத்து நடந்த தகராறில் வாலிபர் வெட்டி கொலை

தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் உள்ள டாஸ்மாக் கடையில் இரவு வரை மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோது வழக்கம். அதனால் அந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் செல்வதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் அங்கு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தகராறு ஒன்றின் தொடர்ச்சியாக இன்று(03.11.2024)ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட வழக்கில் சிறைசென்று ஜாமினில் வெளியே வந்தவரை கொலை செய்துள்ளது ஒரு கும்பல். அதனை போலீசார் தேடி வருகின்றனர்.      

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி பொன்நகரை சேர்ந்தவர் முருகேசன். பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வெள்ளைகண்(24). கட்டிட தொழிலாளி. இவர் இன்று காலை தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு பைக்குகளில் வந்த 4 பேர் அவரை வாள் மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க முயன்ற வெள்ளக்கண்ணுவின் தம்பி கற்குவேல் மீதும் வெட்டு விழுந்தது. இந்த கொலைவெறி தாக்குதலில் வெள்ளக்கண்ணு ரத்தவெள்ளத்தில் அங்கேயே விழுந்தார். இதனையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துபோனார். 

தகவலறிந்த எஸ்பி ஆல்பர்ட்ஜான், ரூரல் டிஎஸ்பி சுதிர், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வனசுந்தர், எஸ்ஐ ஞானராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்டவிசாரணையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் புதுக்கோட்டை அருகேயுள்ள போடம்மாள்புரம் குளக்கரையில் அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ்குமார், ராஜ்குமார், பாண்டி உள்ளிட்ட சிலர் மது அருந்தியுள்ளனர். அப்போது தனது நண்பர்களுடன் சென்ற வெள்ளைகண்ணு அவர்கள் முகத்தின் மீது டார்ச்லைட் அடித்து பார்த்துள்ளார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 16ம்தேதி இரவு போடம்மாள்புரம் பகுதியில் தனியாக வந்து கொண்டிருந்த ராஜேஷை வெள்ளைகண்ணு தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வெள்ளைகண்ணு உள்ளிட்ட அவரது நண்பர்கள் 9 பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இருந்து கடந்த மாதம் 3ம்தேதியன்று ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் தான் வெள்ளைகண்ணு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சம்பவத்திற்கு பதிலடியாகத்தான் இந்த கொலை நடந்துள்ளது என போலீசார் கருதுகின்றனர்.

மேலும் ராஜேசின் நண்பரான தெற்கு கோவங்காட்டை சேர்ந்த ராஜ்குமார் தலைமையில் வந்தவர்கள் தான் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளதாக கருதி, ராஜ்குமார், பொட்டல்காடு சேர்மபாண்டி, போடம்மாள்புரம் சதீஷ்குமார் மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.