அதிக அளவு மண் அள்ளியதாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பேரூரணி குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பலி
Accident
தூத்துக்குடி அருகே பேரூரணி பகுதியில் உள்ள குளத்தில் குளித்த போது மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரின் குழந்தைகளான 7ஆம் வகுப்பு பயிலும் சந்தியா(13), 5ஆம் வகுப்பு பயிலும் கிருஷ்ணவேணி(10), 2 ஆம் வகுப்பு பயிலும் இசக்கிராஜா(7) ஆகிய 3 பேரும், தங்கள் உறவினர்களுடன் பேரூரணியில் உள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக இன்று சென்றனர். குளித்துக் கொண்டிருந்தபோது, இவர்கள் 3 பேரும் எதிர்பாராதவிதமாகச் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று குழந்தைகளைத் தேடினர். பின்னர் நீண்ட நேர தேடுதலுக்குப் பின்னர் சந்தியா, கிருஷ்ணவேணி, இசக்கிராஜா ஆகிய 3 பேரையும் மீட்டு, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அவர்களை ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தட்டப்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குளத்தில் இருந்து அதிக அளவு சரள் மண் அள்ளிவிட்டதாக அள்ளியவருக்கு அரசு அதிகாரிகள் அபராதம் விதித்த நிகழ்வுகள் சமீபத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது.