தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் அடிக்கடி நடக்கிறது வெட்டு,குத்து - பொதுமக்கள் அச்சம்
Murder
சமீபகாலமாக குற்றசம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது பொதுவான பார்வையாக இருந்து வருகிறது. மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் காரணம் என்று சிலரும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சரியாக வழிநடத்தப்படவில்லை என்று இன்னும் சிலரும், காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் முழுமையாக செயல்படவில்லை, அதாவது அவர்களின் ரோந்து பணிகள் போதாது என்று இன்னும் பலரும் பேசிக் கொள்வதை தினந்தோறும் கேட்டு வருகிறோம். எந்த ஒரு செயலும் கட்டுக்குள் இருந்தால்தான் கட்டுப்படுத்த முடியும், கட்டுப்பாட்டை இழந்தால் அவ்வளவுதான், கட்டுப்படுத்த முடியாமல் தவிக்க வேண்டியதுதான். அப்படித்தான் தமிழ்நாட்டு சட்ட ஒழுங்கு நிலமை இருக்கிறது. மதுவை அரசே விற்கிறபோது, அவர்களால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பதை தடுக்க முடியவில்லை. அதன் விளைவுதான் சமீபத்திய குற்றசம்பவங்களுக்கெல்லாம் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கதறி வருகிறார்கள். எங்கோ ஒரு இடத்தில் சம்பவம் என்றால் அது விஷேசமாக பேசப்படும். அதுவே ஆங்காங்கே நடக்கிறது என்றால் சாதாரணமாகிவிடுகிறது. அப்படித்தான் ஆகிப்போனது தமிழ்நாட்டின் நிலமை. அதன் ஒரு பகுதிதான் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை வட்டார பகுதியும்.
சுற்றுவட்டார பகுதி மது பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்ய முக்கியமான இரண்டு இடங்களில் அரசு மதுபான கடைகள் இருக்கிறது. அதனை சுற்றி சுற்றியே வருபவர்கள் ஏராளம். அங்குதான் அத்தனை குற்றங்களுக்கும் அஸ்திவாரம் போடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டாம்புளி அரசு மதுபான கடைக்கும் அருகில் இரண்டு கோஷ்டிகள் சண்டையிட்டுக் கொண்டதில் ரத்தம் சிந்தியது. அச்சம்பவங்களில் தொடர்புடையவர்களை போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் மறவன்மடத்தை சேர்ந்த அர்ஜூணன் மகன் பாத்திரவியாபாரி முருகன்(33) என்பவர் தனது மனைவியுடன் பஸ் ஏறுவதற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென முருகன் மீது பாய்ந்து அவரை ஆயுதங்களால் வெட்டியது. சற்றும் எதிர்பாராத முருகன் மனைவி அவர்களை தடுக்க முயற்சி செய்துள்ளார். அவரையும் அக்கும்பல் ஆயுதங்களால் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடுவது குறித்து அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். அதுபோல் புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வந்து முருகனை தூக்கி செல்லும் வரை ஒன்றரை கி.மீ தூரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் இருந்து யாரும் வரவில்லை. இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டிய காவல்துறையின் தனிப்பிரிவை சேர்ந்தவரும் வரவில்லை. தகவல் தெரிவிக்க செல்போனில் தொடர்பு கொண்டோர் போனையும் அவர் எடுக்கவில்லை. அதன் பிறகுதான் அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுக்கிடையில் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட முருகன் இறந்துபோனார். கொலை செய்யப்பட்ட முருகனுக்கும் தூத்துக்குடி ராஜகோபால் நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மரிய தங்கம் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் இதில் சிப்காட் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் முருகனை மரியதங்கம் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மரிய தங்கம் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சம்பவங்களை தடுக்க வேண்டும் என்பதற்காக போலீசார் குற்றவாளிகளை எப்போதும் பின் தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது என்றாலும் போலீஸ் கெடுபிடி இருக்கிறது என்கிற ஒற்றை வார்த்தை பல குற்றவாளிகளையும், சம்பவங்களையும் தடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.