ஸ்ரீவை சட்ட மன்ற தொகுதியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் - வலுக்கிறது கோரிக்கை

Srivaikundam news

ஸ்ரீவை சட்ட மன்ற தொகுதியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் - வலுக்கிறது கோரிக்கை

தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்துள்ள திமுக, இந்திய அளவிலான கூட்டணியை உருவாக்கும் அளவிற்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறது. இந்த வேளையில் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 2026ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலுக்கு சீட் பெறுவதில் இப்போதே திமுகவோடு பேரம் பேசி மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. கூட்டணியில் பிளவு வராது என்றாலும் சீட் பேரம் கொஞ்சம் கறாரா இருக்கிறது என்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுக காத்திருப்பதுதான் அதற்கு காரணமாம். அதாவது காலத்தே பயிர் செய், அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்கிற பழமொழிகளைதான் நினைக்க தோன்றுகிறது. 

இதன்விளைவு, சட்ட மன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் முக்கியத்துவம் குறித்து கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைப்பதுபோல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தரப்பிலும் இப்போது சீட் ஒதுக்குவது குறித்த கோரிக்கை எழ தொடங்கியிருக்கிறது. அதில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற தொகுதி முன்னிலையில் இருக்கிறது. தற்போது இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏவாக இருக்கிறார். பணத்தை வாரி வழங்குவார் என்று பெயரெடுத்தவர் இவர். ஆனாலும் அவரோடு மூத்த காங்கிரஸ் காரர்களைவிட இளைஞர்களே அதிகம் சுற்றி வருகின்றனர். தொகுதியை பொருத்தவரை, கட்சி பாகுபாடில்லாமல் கூட்டணி கட்சியான திமுகவினரையும் அனுசரித்து போக வேண்டிய நிர்பந்தம் அமிர்தராஜுக்கு உண்டு. ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அதுவே இவருக்கு சோர்வை ஏற்படுத்துகிறது என்று அமிர்தராஜ் தரப்பே முணு முணுக்கிறது.

இந்தநிலையில்தான் தொகுதியை கைப்பற்றும் முயற்சியில் திமுகவினர் இறங்கியிருப்பது தெரிகிறது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியை திமுகவிற்கு ஒதுக்கினால் வேட்பாளர் ஆகலாம் என்று ஆசையில் இருப்பவர்கள் ஒருபுறம், ஆளும் கட்சிக்காரர் என்று சொல்லி அரசு அதிகாரிகளிடம் காரியம் சாதிக்க முடியவில்லையே என்று ஆதங்கத்தில் உள்ளவர்கள் இன்னொரு பக்கம் என்று திமுகவில் பலரும் தொகுதியை திமுகவிற்கு ஒதுக்குவதே தீர்வு என்கிற நிலைக்கு வந்திருக்கின்றனர். ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று(21.09.2024) நடைபெற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் வெளிப்படையாக மேடையில் பேசியதை வைத்து இதை தெரிந்து கொள்ள முடிந்தது. மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள்  உள்பட பலரும் ஸ்ரீவை தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். அரசு திட்டங்கள் முழுமையும் பெறமுடியாமல் போகிறது. அடுத்த கட்சி எம்.எல்.ஏவை அனுகமுடியவில்லை என்கிற குற்றசாட்டையும் அவர்கள் கூறினர். இந்த கூட்டத்தில் மாவட்ட,ஒன்றிய மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.