கலியாவூர் மதகில் இருந்து தாமிரபரணி ஆறு மறுசீரமைக்கும் பணி தொடக்கம்.!
Thamiraparani
தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் மதகில் இருந்து தாமிரபரணி ஆறு மறுசீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தலைமை வகித்தார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலை வகித்தார்.
அப்போது கனிமொழி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த வருடம் பெய்த கன மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. எனவே நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரும் வழித்தடங்களை தூர் வார வேண்டும் என்று அனைரும் வலியுறுத்தினார்கள். எனவே இந்த ஆண்டு மழைக்காலத்திற்கு முன்னதாக தூர் வாற வேண்டும் என்பதற்காக இன்று தூர் வாறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கால நிலை மாற்றத்தினால் அதிக வெயில் மற்றும் அதிக மழை ஏற்படுகிறது. பருவம் தவறி மழை பெய்கிறது. எனவே மழை எந்த அளவுக்கு பெய்யும் என்று சொல்ல முடியவில்லை. நீர் நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் வழித்தடங்களை சரிசெய்துவிட்டால் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பினை குறைப்பதுடன், தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தாலம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரி, குளங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் கொட்டுவதற்கு மண் எடுத்துக்கொள்ளலாம் என்ற முக்கியமான அறிவிப்பு மற்றும் அரசாணையை வெளியிட்டிருக்கிறார். இதன்மூலம் ஏரி, குளங்களில் அதிகளவு தண்ணீர் சேமித்து வைக்க முடியும். அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மூலமும் நீர் நிலைகள் தூர் வாரப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மழையினால் நீர் நிலைகள் மட்டுமல்லாமல் பள்ளிகள், சிறு, குறு தொழில்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றையும் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மூலம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த நேரம் வைக்கிறேன்.
பொதுமக்கள் நீர் நிலைகளில் குப்பைகள், பழைய துணிகள், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் போன்றவற்றை கொட்டக்கூடாது. இதனால் குடிநீர் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை குறைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு நாம் இந்த மண்ணை ஆரோக்கியமானதாக விட்டுச்செல்ல வேண்டும். இந்த உலகத்தை பாதுகாப்பதை நாம் முக்கிய கடமையாக கொள்ள வேண்டும். முக்கியமாக இந்த பணியில் ஊர் மக்களாகிய உங்களுடைய பணியும், பங்கும் இருக்க வேண்டும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், செயற்பொறியாளர் (கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, பொது மேலாளர் Komatsu India pvt Ltd எஸ்.கைலாஷ், EXNORA International Foundation தலைவர் எஸ்.செந்தூர், பாரி, துணை மேலாளர் Komatsu India pvt Ltd டெல்லிபாபு, சமூக பொறுப்பு நிதி பொறுப்பு அலுவலர் ராதாசுப்பிரமணியன், கலியாவூர் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னச்சாமி, மதர் தொண்டு நிறுவன இயக்குநர் கென்னடி, ஒருங்கிணைப்பாளர் பானு, நீர் நிலை பாதுகாப்பு குழு செயலாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.