ஸ்ரீவைகுண்டத்தில் பச்சை நிறமாக மாறிய தாமிரபரணி ஆற்று நீர் - உடனே அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

srivaikundam news

ஸ்ரீவைகுண்டத்தில் பச்சை நிறமாக மாறிய தாமிரபரணி ஆற்று நீர் - உடனே அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

ஆற்றையும், குளத்தையும் ஒன்றாக்கியது, மேட்டையும், பள்ளத்தையும் ஒன்றாக்கியது, வீட்டையும், ரோட்டையும் ஒன்றாக்கியது என மழை வெள்ளம் படுத்திய பாடு மக்கள் நினைவில் இருந்து இன்னும் மறையவில்லை. அதுக்குள் ஸ்ரீவைகுண்டத்தில் குடி நீர் பஞ்சத்தின் அச்சத்தால் தேக்கி வைத்திருக்கும் தண்ணீர் தன்மையிழந்து பச்சையாகி மக்களை வேறு வகையில் அச்சுறுத்தியிருக்கிறது. 

மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி தென் காசி, திருநெல்வேலி மாவட்டங்களை தாண்டி தூத்துக்குடி மாவட்டம் வழியாக கடலில் ஐக்கியமாகிறது தாமிரபரணி ஆறு. வழியோர கிராமங்களின் விவசாயம், குடிநீர் தேவை எல்லாவற்றிக்கு இதுதான் ஆதாரம். தேவையான தண்ணீரை அணையிலேயே தேக்கி வைத்து, தேவைப்படும்போது திறந்துவிடுவது அரசு நிர்வாகத்தின் வேலையாக இருந்து வருகிறது. அந்த வகையில் எதிர்கால தேவையை கருதியும், சில பாலம் கட்டும் பணி நடைபெறுவதாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அணையில் தாமிரபரணி தண்ணீர் நிறுத்தி, தேக்கி வைக்கபட்டிருக்கிறது. வெகுநாட்கள் தேக்கி வைக்கப்பட்டிருப்பதால் அத்தண்ணீர் நிறமாறி காணப்படுகிறது.   

அதனால் இங்கிருந்து மோட்டார் மூலம் எடுத்து சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு இயலாத வகையில் சகதி கலந்த துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் பாத்திரங்களில் அதன் அடியில் சகதி, மணல் கழிவுகள் அப்படியே படிந்து விடுகிறது. இதனால், பொதுமக்கள் மினரல் வாட்டர் வாங்கி குடித்து வருகின்றனர். நிறம்மாறிய தண்ணீரில் வெப்பத்தால் மீன்கள், தவளைகள், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் இறக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறான நிலை ஏற்படும்போது மக்களிடையே நோய் பரவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே நடைபெற்று வரும் பால வேலைகளுக்கு இடையூறு இல்லாமல் பிரத்யேகமாக கால்வாய்கள் அமைத்து புதிய தண்ணீரை இந்த தண்ணீருக்குள் விட்டு தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் வரலாம் என்கிற எண்ணத்தில் அணையில் பெரிய அளவில் தண்ணீர் திறந்துவிடாமல் இருப்பதாக தெரிகிறது. அதுபோன்ற முன்னேற்பாடுகள் அவசியம்தான் என்றாலும், அதைவிட ஆபத்தை விளைவிக்கும் தேங்கியதால் கெட்டுப்போன தண்ணீரை உடனே அகற்ற வேண்டியது அவசியமாகும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதுகுறித்து அதிகாரிகள், அணைக்கட்டின் உட்பகுதிகளில் பச்சை கலரில் தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மற்றபடி மக்களுக்கு ஆற்றின் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தான் வழங்கப்படுகிறது என்கின்றனர்.