தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.1,072 கோடியாக அதிகரித்துள்ளது - நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் தகவல்
TMB News
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 2023-24ம் நிதியாண்டின் நிகர லாபம் ரூ.1,072 கோடியாக அதிகரித்துள்ளது என வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கிரூஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921ம் ஆண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தொடங்கப்பட்டது. 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில், 12 மண்டல அலுவலகங்கள், 552 கிளைகள், 1157 ஏடிஎம் மையங்கள், 358 பணம் செலுத்தும் மையம், 126 இடங்களில் இ-லாபி மையங்களுடன் செயல்பட்டு வருகிறது.வங்கி 2023-24ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையின்படி வங்கியின் நிகர லாபம் ரூ.1,029 கோடியில் இருந்து ரூ.1072 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.85,348 கோடியில் இருந்து ரூ.89,485 கோடியாக அதிகாரித்துள்ளது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு ரூ.13,736 கோடியில் இருந்து ரூ.14,676 கோடியாக அதிகாரித்துள்ளது. பங்குகளின் மதிப்பு ரூ.438 இல் இருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. வட்டி வருமானம் ரூ. 4,081 கோடியில் இருந்து ரூ.4,848 கோடியாக மேம்பட்டுள்ளது. மொத்த வருமானம் ரூ.4,710 கோடியில் இருந்து ரூ.5,493 கோடியாக உயர்ந்துள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகை 87 சதவீதத்தில் இருந்து 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. மெர்க்கன்டைல் வங்கியை பொறுத்தவரையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதைவிட சில்லறை வர்த்தகம், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோருக்கு கடன் வழங்குவதையே முதன்மையாக கொண்டுள்ளது. அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 9 சதவீதம் மட்டுமே கடன் வழங்கியுள்ளது. வங்கியின் மொத்த வைப்பு நிதி ரூ.49,515 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் வைப்பு நிதி ரூ.47,766 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த கடன் தொகை ரூ.39,970 கோடியாக உயர்ந்து, 6.35 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.2,151 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 2.72 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. வங்கியின் நிகர மதிப்பு ரூ.6,928 கோடியில் இருந்து 14.33 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.7,921 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த கடன் தொகையில் எஸ்.எம்.ஏ.வானது 6.51 சதவீதத்தில் இருந்து 3.97 சதவீதமாக குறைந்துள்ளது. வங்கியின் வாராக்கடன் மொத்த கடன் தொகையில் 1.44 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.85 சதவீதமாகவும் உள்ளது. 2023-24 நிதியாண்டில் தலா ரூ.10 முக மதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.10 ஈவுத்தொகை (100 சதவீதம்) செலுத்த பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது என்றார்.
அப்போது தலைமை நிதி அலுவலர் பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் பொதுமேலாளர்கள் இன்பமணி, சூர்யராஜ், நாராயணன், அசோக்குமார், விஜயன், சுந்தரேஷ்குமார், ரமேஷ், ஜெயராமன், துணைப் பொதுமேலாளர்கள் ஆனந்த், கவுதமன், லட்சுமணபிரசாத், சுரேந்திரன், பார்த்தசாரதி, ராஜ்குமார், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார், தலைமை மேலாளர் கந்தசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.