நாட்டின் காலாச்சாரத்தை காப்பாற்ற பிரதமர் ரூ.6000 கோடி வழங்கியுள்ளார் - அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ADICHANALLUR - MINISTER NIRMALA SEETHARAMAN

நாட்டின் காலாச்சாரத்தை காப்பாற்ற பிரதமர் ரூ.6000 கோடி வழங்கியுள்ளார் - அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

தூத்துக்குடி மாவட்டம்,  ஸ்ரீவைகுண்டம் ஆதிச்சநல்லூரில் இந்திய தொல்லியல் அருங்காட்சியகம் கட்டுவதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (05.08.2023) அடிக்கல் நாட்டினார். 

அங்கு பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ’’உலகத்தில் உள்ள பழமையான சில இடங்களிலேயே மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த மக்களின் கலாச்சாரத்தை பற்றி அறிந்துகொள்ளும் சின்னங்களை அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளியே எடுத்து பார்க்கிறோம். நாகரிகங்களில் 3 முதல் 4 கால கட்டங்களில் ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.  இங்குள்ள மக்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி வணிகம் செய்துள்ளார்கள். இப்பகுதியில் உள்ள பறம்பு இரும்புக்காலத்தை சேர்ந்தது என்கிறார்கள். இங்கு இறந்தவர்களை தாழிகளில் இட்டு ஈமச்சடங்கு செய்து புதைத்துள்ளனர். மேலும், எகிப்து பிரமீடுகளில் உள்ளதுபோது இறந்தவர்களின் உடலை மூலிகைகளினால் பதப்படுத்தி அவர்கள் வாழ்ந்தபோது பயன்படுத்திய நகைகள், ஆடைகள், உணவு ஆகியவற்றையும் சேர்த்து புதைத்துள்ளனர். 

அலெக்ஸாண்டர் ரியோ 1890ம் ஆண்டுகளிலேயே இங்கு அகழ்வாராய்ச்சி செய்துள்ளார். அதன்பிறகு சுமார் 100 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்திய தொல்லியல் ஆராய்ச்சித்துறையின் மூலம் அகழ்வாராய்ச்சி செய்யப்படுகிறது. நாம் தற்போது பொதுயுகம் 2000 வருடங்களுக்கு பின் உள்ள காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். பொது யுகம் தொடங்குவதற்கு முன்பு 270 வருடங்கள் பழமையான பொருட்கள், 470 வருடங்கள் பழமையான பொருட்கள் கூட இங்கு கிடைத்துள்ளன. அதைத்தவிர, நெல் உமி, சிறு தானியங்களும் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் 657 பொது யுகத்துக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3400 வருடங்களுக்கு முன்பே நமது முன்னோர்கள் நெல், திணை உள்ளிட்ட தானியங்களை உபயோகித்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை 3500 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் இறந்தவர்களை எப்படி புதைத்தார்கள், நதிக்கரையோரம் யாரை புதைத்தார்கள், சற்று தூரத்தில் யாரை புதைத்தார்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அகழ்வாராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளார்கள்.

நாடு முழுவதும் 5 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்படும் என்று 2021ம் ஆண்டின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதில் ஆதிச்சநல்லூர் முன்னணியில் இருக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றாகும். இப்பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்து பொருட்களை கண்டறியவும், அதேபோல் அலெக்ஸாண்டர் ரியோ காலத்தில் கண்டறியப்பட்ட பொருட்களையும் சேர்த்து அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்களிலேயே பொதுமக்கள் அறிந்து கொள்ள அருங்காட்சியகம் அமைக்க இந்திய தொல்லியல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இங்கிருந்து 5000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் எல்லாம் நெதர்லாந்து வரை எடுத்து செல்லப்பட்டுள்ளது. அந்த பொருட்களை எல்லாம் மீண்டும் இங்கு கொண்டு வருவதற்கு இந்திய அரசின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய பல தலைமுறையினர் நமது மூதாதையர்கள் இப்படிதான் வாழ்ந்தார்கள் என்று அறிந்து கொள்ளும் வகையில் பழங்கால பொருட்கள் கிடைத்த இடத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

2000ம் ஆண்டிலேயே கண்டறியப்பட்ட இந்த இடங்களில் 2020ம் ஆண்டுதான் பாரத பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அகழ்வாராய்ச்சி செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அதேபோல், பிரதமர் அவர்கள் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்து அடிக்கடி சொல்வதுண்டு, அந்த வகையில்தான், தமிழகத்தில் இருந்து மக்களை அழைத்து சென்று காசி தமிழ் சங்கமம் விழா நடத்தி காசியில் வாழ்ந்த தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள், தமிழ்மொழியை அங்கு எப்படி வளர்த்தார்கள் என்பதை சொன்னார்கள். அதேபோல், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் இந்திய தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு மத்திய அரசு போதிய நிதியை எந்தவித தடையுமின்றி மத்திய அரசு வழங்கவுள்ளது. இங்கு அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் பழங்கால பொருட்களை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அறிவியல்பூர்வமாக அமைக்க வேண்டும் என்பதற்காக புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்கள் அறியும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கண்ணாடிக்குள் வைக்கப்படும் பொருட்களில் க்யூ ஆர் கோடு பொறிக்கப்பட்டு கண்ணாடிக்கு மேலேயே பொதுமக்கள் தங்களது அலைபேசியை வைத்து ஸ்கேன் செய்தால், அந்த பொருள் பற்றி ஒலி வடிவில் அவர்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. 

பழமையான சமுதாயங்கள் வாழ்ந்த திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் இந்திய தொல்லியல் துறை மூலம் அழகான அகழ்வாராய்ச்சி இடம் கிடைத்துள்ளது. இப்பகுதி வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக நபர்கள் இந்த அகழ்வாராய்ச்சி இடத்தினை பார்க்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.  நமது பழமையை இன்றைய புதுமையுடன் இளைஞர்களை கவரும் வகையில் அமைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தை பற்றி அகழ்வாராய்ச்சி செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சோம்நாத் கோவில் அந்நியர்களால் 17 முறை அழிக்கப்பட்டது. அதை மீட்டு புணரமைத்த பெருமை முன்னாள் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களை சாரும்.  அதேபோல் காசி விஸ்வநாதர் கோவிலும் புணரமைக்கப்பட்டது. தென்காசி கோவிலே காசி கோவிலின் நியாபகமாகத்தான் கட்டப்பட்டுள்ளது. மார்க் டிவைன் அவர்கள், நாகரிகத்திற்கும் மிகப் பழமையானது காசி நகரம் என குறிப்பிடுகிறார். 

நமது கலாச்சாரம் உயிர்ப்புடன் இருக்கும் வரைதான் நமது நாடும் உயிர்ப்புடன் இருக்கும். நமது கலாச்சாரத்தை காப்பதற்காக 15 கலாசார மையங்களை உருவாக்கினோம். புத்த கலாச்சார மையங்களை இணைத்து அதை ஒரு கலாச்சார மையமாக உருவாக்கினோம். வியட்நாம், கம்போடியா, லாவோ, ஜப்பான்ஆகிய நாடுகளில் இருந்து வரும் மக்கள் புத்த கலாச்சார மையத்தினை பார்வையிடுகிறார்கள். புத்த சின்னங்கள் இருக்கின்ற புத்தயிசம் போன்று இராமாயண சின்னங்கள் இருக்கின்ற இராமாயிணசம். இன்று இலங்கையில் இருக்கின்ற அசோகவனம் வரைக்கும் இராமாயிணசத்தை அமைக்கின்ற முயற்சிக்கு இலங்கை அரசுடன் பேச்சுவார்தை நடத்தி அவர்களும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் உள்ள இராமாயண சின்னங்களை பார்வையிடுவதற்காக இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு அதிகமாக செல்கின்றனர். தங்கள் நாட்டுக்கு வந்து அப்பகுதிகளை பார்வையிடுமாறு இலங்கை நாட்டினர் மற்றவர்களை வரவேற்கிறார்கள். 

இதேபோல, கிருஷ்ணாயிசம், இமாலயிசம் அமைக்கப்படுகிறது. இன்றைக்கு 30 மாநிலங்களுக்கு நாட்டின் காலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக 75 திட்டங்களுக்கு ரூ.6000 கோடியினை மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.  இதேபோல, கங்கோத்ரி, யமுனோத்ரிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாமிரபரணியின் வரலாற்றினையும் அறிந்துகொள்ளலாம்.  இதேபோல் ஹிருதய் (Heritage City Development & Augmentation Yojana) திட்டத்தின் மூலம்  ரூ.500 கோடியில் ஆஜ்மீர், பாதாமி, காஞ்சிபுரம், மதுரா, பூனா, வாரணாசி, வேளாங்கண்ணி உள்ளிட்ட 12 நகரங்களில் கழிவுநீர் வாய்க்கால்கள் உள்ளிட்ட சுகாதார வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 351 தொல்பொருட்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் பகுதியில் உள்ள 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளன. அதை மீண்டும் இங்கு கொண்டுவருவதற்கு இந்திய தொல்லியல் துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  நமது கலாச்சாரத்தை காப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் எனக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள். கலாச்சார இடங்களை பாதுகாக்க தனியார் துறையினர் பங்களிப்பு செய்யலாம். ஆதிச்சநல்லூர் பகுதியிலும் தனியார் துறையினர் தங்களது பங்களிப்பை வழங்கலாம். 

வெள்ளையர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணிய பாரதியார் போன்ற எண்ணற்ற தலைவர்கள் மகாத்மா காந்தியோடு இணைந்து போராடியுள்ளனர். தற்போது ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. ஆனால் பல விஷயங்கள் நமது மனதில் பதிந்துவிட்டது. இதை நினைவுகூறுவதற்காகத்தான் கடந்த ஆண்டு 75வது சுதந்திர தினவிழாவில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் செங்கோட்டையில் உரையாற்றியபோது 

5 விஷயங்களை தெரிவித்தார்கள். ஒன்று, ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் விடுதலை பெற்றாலும் நமது மனதில் அவர்கள் பதித்து சென்ற சில எண்ணங்களை கைவிட வேண்டும், நமது கலாச்சாரத்தை பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும். அவர்கள் விட்டுச்சென்ற கலாச்சாரம் நமக்கு வேண்டாம் என்று தெரிவித்தார்கள்.

புண்ணிய பூமியான தூத்துக்குடியில் இருந்து நமது கலாச்சாரத்தை பற்றி பேசுவது மிகவும் அவசியமானது. ஜாலியன் வாலாபாக் பகுதியில் 1919ல் ஏராளமான மக்கள் இறந்தனர். அப்பகுதியில் உள்ள நினைவுச்சின்னத்தை நாம் புணரமைத்துள்ளோம். அதேபோல் இராஜ்பத் பாதை அதாவது இராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை இருக்கின்ற சாலையின் பெயரை கடமைப்பாதை என்று பாரத பிரதமர் அவர்கள் மாற்றினார்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த இடம், வளர்ந்த இடம் மற்றும் அவர் எங்கெங்கே இருந்தாரோ அந்த 5 இடங்களில் மத்திய அரசு நினைவுச்சின்னம், நூலகம் போன்றவற்றை அமைத்துள்ளது. இலண்டனில் அம்பேத்கர் படித்த இடத்தினையும் மத்திய அரசு வாங்கி அங்கு நினைவுச்சின்னம் அமைத்து அவரை பெருமைப்படுத்தியுள்ளது. மன்னர் ஜார்ஜ் அவர்களின் சிலை அகற்றப்பட்ட இடத்தில் வேறு சிலைகளை வைப்பதற்கு யாரும் யோசிக்கவில்லை. இந்நிலையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் சுதந்திரத்திற்கு போராடிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் சிலையினை நிறுவியுள்ளார்கள். இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற 4 போர்களில் இந்திய மக்களை காப்பாற்ற தங்களது உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு இந்தியா கேட் பின்புறம் தேசிய போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. விடுதலைக்கு பிறகு நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு அவர் பிறந்த ஊரிலேயே ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு உலகத்திலேயே பெரிய சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் பகுதியில் உள்ள அனைத்து தீவுகளுக்கும் நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. 

பல யுகங்களாக இருக்கின்ற பாரத நாட்டின் சரித்திரத்தை நினைவுகூறும் வகையில் டெல்லியில் 1.17 இலட்சம் சதுர மீட்டர் பரப்பில் உலகிலேயே பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மூன்று அடுக்குகளை கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கின்ற நினைவுச்சின்னங்கள் அங்கு வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், நமது நாட்டின் பிரதமர்கள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பிரதமர்கள் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரப்போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்களிப்பை எடுத்துக்கூறும் வகையில் பழங்குடியினர் அதிகம் வாழும் 10 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  பழங்குடியின தலைவரான பிர்சா முண்டா அவர்களின் பிறந்த நாளை பழங்குடியினரை கௌரவிக்கும் வகையில் பழங்குடியினர் தினமாக அறிவிக்கப்பட்டு அவருக்கு ஒரு பெரிய சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.  பழங்கால கப்பல் வணிகம் குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்படவுள்ளது. அதேபோல் பனையோலைகள், செப்பு பட்டயங்களில் எழுதப்பட்ட வரலாற்றுக்குறிப்புகளை டிஜிட்டல் மயமாக்கி வருகிறோம். 3 கோடி பக்கங்களில் பனையோலை குறிப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. உலக அளவில் பெருமையாக இருக்கக்கூடிய இந்திய தொல்லியல் துறையினர் இன்று ஆதிச்சநல்லூரில் பலவிதமான முயற்சிகளுடன் அருங்காட்சியகம் கட்டவுள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்’’ என்றார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசும்போது, ‘’தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வின் தொன்மையை, தமிழ்மொழியின் சிறப்பை பற்றி பேசுவதென்றால் தமிழ்மொழிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதற்கு தொன்மை இருக்கிறது. செம்மொழி அடையாளம் இருக்கக்கூடிய அந்த நேரத்தில் நாம் இன்று வரை தொடர்ச்சியாக பேசக்கூடிய தமிழ் மொழிக்கு மிகப்பெரிய பெருமை இருக்கிறது. நம்முடைய பெருமையை, நமது மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களின் வாழ்வியல் எப்படி இருந்தது, பழக்கவழக்கங்கள் எப்படி இருந்தது. வாழ்க்கையில் என்னென்ன சாதனைகள் செய்தனர் என்பதை அகழ்வாய்வு மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும்.  ஆதிச்சநல்லூர் பகுதியில் நடந்து கொண்டிருக்கின்ற அகழாய்வுகள் என்பது இந்திய அளவில் நடக்கும் அகழாய்வுகளில் முக்கியமான ஒன்றாகும். அலெக்ஸாண்டர் ரியா அவர்களுக்கு பிறகு 100 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது இந்திய தொல்லியல் துறை மூலம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள தங்கத்திலான வளையம் மூலம் நமது முன்னோர்கள் தங்கத்தின் பயன்பாட்டினை அறிந்துள்ளார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது. மேட்டு பகுதியில் ஈமச்சடங்குகள் செய்து மக்களை புதைத்தது தெரியவருகிறது. அங்கு கிடைத்த பொருட்களை கண்ணாடி மீது நின்று பார்க்கக்கூடிய வகையிலே அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. 

சமீபத்தில் பராக்கிரமபாண்டியபுரத்தில் தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்படாத அளவில் மக்கள் வாழ்ந்த ஊரை சுற்றி மிகப்பெரிய மதில் சுவர் கட்டப்பட்டு உள்ளே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற செய்திக்கான ஆதாரம் நமக்கு கிடைத்திருக்கிறது. இப்படி மிக சுவாரசியமாக இருக்கின்ற பல்வேறு விஷயங்களை அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நமக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது. 

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி என்பது ஊர் கூடி இழுத்திருக்கக்கூடிய தேர் போன்றது. இன்று தூத்துக்குடி பனிமய மாதா ஆலய தேரோட்டம் நடைபெறும்  நேரத்தில் மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, தொல்லியல் அதிகாரிகள், எழுத்தாளர்கள், தொல்லியலாளர்கள் என்று எல்லோரும் சேர்ந்து இழுத்த தேர்தான் இந்த அருங்காட்சியகம். அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தியாவிலேயே, உலக அளவிலே எல்லோரும் போற்றக்கூடிய அருங்காட்சியமாக ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைய வேண்டும்’’ என்றார்.  

இந்த நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இந்திய தொல்லியல் துறை  பொது இயக்குநர் (புதுடெல்லி) டாக்டர் கிஷோர் குமார் பாசா, துணை பொது இயக்குநர் டாக்டர் எஸ்,கே.மஞ்சுள், இயக்குநர் டாக்டர் அருண்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, ஆதிச்சநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பார்வதி சங்கர்கணேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.