தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் தசரா விழா - ஏற்பாடுகள் தீவிரம்
Amman News
முப்பெரும் தேவியின் வடிவமாக உள்ள அம்மன் கோவில்களில் தசரா திருவிழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பத்து நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடபடுவது வழக்கம். முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்,அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி ஆகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ஆகவும் அம்மனை வழிபடுவது தசரா விழாவின் சிறப்பாகும்.
பல்வேறு இன்னல்களை செய்து வரும் மகிசாசூரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்கார நிகழ்ச்சியோடு தசரா விழா நிறைவடையும். இந்த ஆண்டு தசரா விழாவில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளன. தூத்துக்குடி மேலூர் தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தசரா விழா வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஏ.செல்வ சித்ரா அறிவழகன், செயல் அலுவலர் எம்.ராதா அறங்காவலர்கள் ஆர். மகாராஜன், ஜி.பாலகுருசாமி, மற்றும் ஆகியோர் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள், ஒன்றாம் தேதி இரவு அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெறும். அதனை தொடர்ந்து இரண்டாம் தேதி இரவு அம்பாள் கொடி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மூன்றாம் தேதி காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் திருநாளான 4ஆம் தேதி முதல் 9ஆம் திருநாளான 11 ஆம் தேதி அம்பாள் கொலு காட்சி நடைபெறும். ஒன்பது நாட்களும் ஸ்ரீ மாரியம்மன் ஒவ்வொரு அலங்காரத்திலும் கொலுவில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆலய மூலஸ்த்தானத்திலும் கொலு மண்டபத்திலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து பத்தாம் திருநாளான பன்னிரண்டாம் தேதி காலை 8 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து நண்பகல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சியானது தெப்பக்குளம் அருகே நடைபெற உள்ளது.
அதன் பின்னர் மாரியம்மன் பித்தளை சப்பரத்தில் பல்வேறு அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சியானது 13 சிவப்பு சாத்து மற்றும் வெள்ள சாத்து அலங்காரத்தில் மற்றும் 14 தேதி பச்ச சாத்து அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். வரும் 15ஆம் தேதி சப்பரம் கோவிலை வந்தடையும். தொடர்ந்து 16ஆம் தேதி 108 கலச அபிஷேகம், அன்று இரவு பூ பல்லாக்கில் அம்மன் ரத வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் தமிழக சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த தசரா விழா கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் உதவியுடன் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று கூறினார்கள்.