சாயர்புரம் வழித்தடத்தில் நள்ளிரவு, அதிகாலை பேருந்துகள் இயக்கக் கோரி போராட்டம் நடத்தப் பொதுமக்கள் முடிவு
Bus news
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், ஏரல், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தூத்துக்குடி மற்றும் வெளியூர்களுக்கு செல்ல நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றனர்.
தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏராளமான கோவில்கள் இருப்பதால், விசேஷ நாட்களிலும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் பெருமளவில் அரசுப் பேருந்துகளை நம்பி பயணம் செய்து வருகின்றனர். மேலும், தூத்துக்குடி தொழில் நகரமாகவும், துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் என அனைத்து போக்குவரத்து வசதிகளும் கொண்ட முக்கிய மையமாகவும் விளங்குகிறது.
மதுரை “தூங்கா நகரம்” என அழைக்கப்படும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 24 மணி நேரமும் மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் மதுரையிலிருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு போக்குவரத்து வசதி உள்ளது. ஆனால், தூத்துக்குடியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தூத்துக்குடி நகரத்திற்கும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பேருந்து வசதி போதிய அளவில் இல்லாதது கண்டிக்கத்தக்கது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், வெளியூர்களுக்கு சென்று நள்ளிரவில் வீடு திரும்பும் சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு ஸ்ரீவைகுண்டம் – மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட்ட 153 X1 என்ற பேருந்து சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால், வெளியூர்களுக்கு சென்று நள்ளிரவில் வீடு திரும்பும் சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நகரப் பகுதிகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் இப்பகுதி மக்கள், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அந்த தேவையை பூர்த்தி செய்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், அதிகாலை நேரங்களில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சிவகளை, சாயர்புரம், தூத்துக்குடி, மாசார்பட்டி, இருக்கன்குடி வழியாக சாத்தூர் செல்லும் தடம் எண் 147சி என்கிற பேருந்து, சுப்ரமணியபுரத்திலிருந்து சாயர்புரம், புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் தடம் எண் 52 A என்கிற டவுன் பஸ் ஆகியவற்றைத் தவிர, காலை 6 மணிக்கு முன்னதாக தூத்துக்குடி நோக்கி வரும் வேறு எந்த பேருந்தும் இல்லை. இதனால்,அதிகாலையில் வெளியிடங்களுக்கு செல்ல கிளம்புவோர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, இரவு நேரத்தில் ஏரலுக்கு செல்லும் பேருந்துகளில் ஒன்றை அங்கேயே நிறுத்தி, அதிகாலையில் கிளம்பி சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கு இயக்க வேண்டும். அதுபோல் சாயர்புரம் வழியாக ராமேஸ்வரம், விளாத்திகுளம், திருப்பூர் மற்றும் பழனி, பொள்ளாச்சி வழியாக கோவை, கூடுதலாக இருக்கன்குடி ஆகிய ஊர்களுக்கு செல்ல புதிய பேருந்து சேவைகளை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன், தூத்துக்குடியிலிருந்து சாயர்புரம் – ஏரல் – நாசரேத் – சாத்தான்குளம் – திசையன்விளை வழியாக உவரி வரை இயக்கப்படும் 143 C பேருந்திற்கு எதிர்திசை பேருந்தான தடம் எண் 145 SSS என்கிற பேருந்து தற்போது வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. அதனால் காலையில் 143 சி என்கிற பேருந்தில் உவரிக்கு செல்லும் சாயர்புரம் வழித்தட மக்கள் மதியம் வீடு திரும்ப முடியாமல், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பல பேருந்துகள் மாற்றி ஏறி கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே, நிறுத்தப்பட்ட தடம் எண் 153 X1, தடம் எண் 145 SSS பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்கவும், சாயர்புரம் வழித்தடத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலில் எதிரொலிக்கும் வகையில் மிக விரைவில் போராட்டங்கள் நடத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
nadunilai.com