கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது - மாவட்ட போலீஸ் எச்சரிக்கை

Thoothukudi Police

கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது - மாவட்ட போலீஸ் எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, ஜாதி ரீதியான மோதல்களை தூண்டும் வகையிலோ, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது. 

இந்தநிலையில் மேலஆத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் நவீன் ஹரிஷ் (23) என்வர் கையில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன்ஹரிஸ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த ஒரு‌ வாள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்  சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் மீது நடவடிக்கை மேற்கொண்டும், அதே போன்று பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து ரவுடித்தனம் செய்தல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆயுதச் சட்டத்தின் படி 107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 197 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் என்று தெரிவிக்கும் மாவட்ட காவல்துறை, இதுபோன்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரிக்கை மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.