கடல் போல் மக்கள் வெள்ளம் - தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

ADMK NEWS

கடல் போல் மக்கள் வெள்ளம் - தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

தமிழகத்திற்கு வரும் 2026ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரங்களை துவங்கி உள்ளன. அதுபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற கோஷத்துடன்  பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி,திருச்செந்தூர்,ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். முதற்கட்டமாக நேற்று  கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் இரவில் தூத்துக்குடி அண்ணாநகரில் பிரசாரம் மேற்கொண்டார். சென்ற இடமெல்லாம் கூட்டம் பெருமளவில் இருந்ததை பார்த்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தூத்துக்குடி அண்ணாநகரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது.  ஸ்டெர்லைட் விவகாரத்தினால் கடந்த சில ஆண்டுகளாக தூத்துக்குடியில் அதிமுகவிற்கு எதிரான பிரசாரங்கள் இருந்து வந்ததை பார்த்து வந்த எடப்பாடிக்கு, பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு கோஷம் போட்டது ஆறுதல் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
 

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேருந்தில் வந்த அவர், லிப்ட் மூலமாக பேருந்தின் மேல் தளத்திற்கு வந்தார். அவர் அருகில் நின்ற மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், உணர்ச்சி பொங்க மைக்கில் பேசினார். இந்த இடமெல்லாம் மழை வெள்ளத்தில் மிதந்த போது ஆளும் கட்சியினர் யாரும் உடனே வரவில்லை. அதற்கு முன்னாடியே எங்க தலைவர் இங்கு வந்தார். தண்ணீருக்குள் நின்று பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தூத்துக்குடி பக்கிள் ஓடையை சீரமைத்தார், அரசு மருத்துவமனைக்கு புதிய கருவிகளை கொடுத்தார் என்று அடுக்கி கொண்டே போனார். அதில் நெகிழ்ந்துபோன எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.எஸ் கையில் இருந்த மைக்கை வாங்கி,  தூத்துக்குடியில் கடல் இருக்கிறது, இங்கு கடல் போல் மக்கள் வெள்ளம் கூடியிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது வரும் தேர்தலில் நாம் தூத்துக்குடியில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று தோன்றுகிறது என  பேசத்துவங்கினார். அப்போது அவர், தி.மு.க கூட்டணி வலுவான கூட்டணி, சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அது பகல் கனவாகத்தான் இருக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த ஆரவாரத்தை நேரலையில் பார்த்துக் கொண்டு இருப்பார். அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் ஆட்சி அமைக்கும். தூத்துக்குடி கடந்த 2023-ம் ஆண்டு கடும் வெள்ளத்தில் மிதந்தது. அப்போது முதல்வர் உங்களை பார்க்க வரவில்லை. டெல்லி சென்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களை பற்றி சிந்திக்காத முதல்வர் தேவையா?. மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாத முதல்வர் தேவையா?. மக்கள் உணவு, இருப்பிடம் இன்றி தவித்தனர். வெள்ளம் சூழ்ந்த மறுநாளே நான் இங்கு வந்தேன். பக்கிள் ஓடை விரிவாக்கம் செய்யும் பணி அதிமுக ஆட்சி காலத்தில் 80 சதவீதம் முடிக்கப்பட்டு இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பணியை செய்து முடிக்கவில்லை. அதனால் வெள்ள நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது. அப்போது, முதல்வரோ, இங்கு உள்ள திமுக அமைச்சரோ மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. மக்களை பற்றி கவலைப்படாமல், தன் வீட்டு மக்களை பற்றி மட்டும் கவலைப்படும் முதல்வர். பல வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கி இருந்த போது, ஓடோடி வந்து நாங்கள் உதவி செய்தோம்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உதவி செய்வது நாங்கள்தான். அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி ஆனது. மத்தியரசு ஒத்துழைப்போடு ரூ.1000 கோடியில் பணிகள் நடந்தன. பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், இவர்கள் ரிப்பன் வெட்டினார்கள். மாநகராட்சி பகுதியில் தடையில்லா பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ரூ.283 கோடியில் 4-வது பைப்லைன் திட்டம் அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. தூத்துக்குடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு. அரசு மருத்துவமனைக்கு லீனியர் ஆக்சிலேட்டர் கருவியை கொடுத்தது அதிமுக. தேர்தலின் போது திமுகவில் 515 வாக்குறுதிகளை வெளியிட்டார்கள். ஆனால் உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கொடுக்க வேண்டும் என்று நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆட்சிக்கு வந்து 28 மாதம் கழித்து எங்களின் போராட்டம் காரணமாக குடும்பத்தலைவிக்கு ரூ.1000 கொடுத்தார்கள். இன்னும் 30 லட்சம் பேருக்கு விதியை தளர்த்தி மாதம் தோறும் ரூ.1000 கொடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளார். பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். இந்த 30 லட்சம் பேருக்கும் 52 மாதம் பட்டைநாமம் போட்டு விட்டார்கள்.

நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் ரூ.1500 கொடுக்கிறோம் என்று கூறினோம். கொரோனா காலத்தில் ரேஷன் கடைகளில் விலையில்லா அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். நான் இங்கு வருகிற போது, வழியில் ஒருவர் ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தார். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா. அதிமுக ஏழை மக்களுக்காக அம்மா உணவகத்தை கொண்டு வந்தது. இந்த உணவகம் மூலம் கொரோனா காலத்தில் 7 லட்சம் பேருக்கு உணவு கொடுத்தோம். தை பொங்கலுக்கு 2,500 ரூபாய் கொடுத்தோம். ஆனால் இவர்கள் கொடுத்தார்களா? இந்தியாவில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக புயல், வெள்ளம், கொரோனா எல்லாவற்றையும் சந்தித்தோம். ஆனால் தற்போது முதல்வர் வாக்கிங் செல்கிறார், பளு தூக்குகிறார், சைக்கிள் ஓட்டுகிறார். இதற்காகவா மக்கள் உங்களை முதல்வராக்கினார்கள். மக்கள் தங்களுக்கு நல்லது செய்வார்கள், பல திட்டங்களை கொடுப்பார்கள் என்று நினைத்தார்கள். முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று சைக்கிள் ஓட்டிக் கொண்டு இருக்கிறார். வெளிநாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றார். அங்கு ஒருவரும் வரவில்லை என்றதும், தமிழக தொழில் அதிபர்களை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறார். 

இப்படி நடிக்கும் முதல்வர் தேவையா. நீட் தேர்வு ரத்துதான் முதல் கையெழுத்து என்று கூறினார்கள். 50 மாதங்கள் ஆகியும் இதுவரை ரத்து செய்தார்களா?  நீட்தேர்வு ரத்து ரகசியம் தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். இன்னும் 2 நாட்களில் அவரது அப்பா இங்கு வர உள்ளார். அவரிடமாவது, அந்த ரகசியத்தை சொல்லி அனுப்புங்கள். நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் விவாதம் வந்த போது, உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து விட்டது. இதில் விதிவிலக்கு பெறமுடியாது என்று கூறி விட்டார். கியாஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.100 மானியம் என்று கூறினார்கள். ஆனால் கொடுக்கவில்லை. 

கல்விக்கடன் ரத்து என்றார்கள். ரத்து செய்யவில்லை. ஆனால் ஒட்டுமொத்த மக்களின் குறைகளையும் ஆய்வு செய்து நிறைவேற்றியது அதிமுக மாநகராட்சியில் வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. குடிநீர் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. குப்பைக்கும் வரி போட்டு விட்டார்கள். மின்சாரத்தை தொட்டால்தான் சாக் அடிக்கும், ஆனால் மின்கட்டணதை கேட்டாலே சாக் அடிக்கிறது. மின்கட்டணம் ஏற்கனவே 52 சதவீதம் உயர்த்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 15 சதவீதம் உயர்த்தப்பட்டு விட்டது. மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கெடுக்கப்படும் என்றார்கள். அதனை நிறைவேற்ற வில்லை. கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா. மாநகராட்சியில் கட்டிட அனுமதிக்கு, அதிமுக ஆட்சியில் ரூ.40 ஆயிரம் செலுத்த வேண்டி இருந்தது. தற்போது ரூ.80 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். 100 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. 

எங்கு பார்த்தாலும் கொலை சம்பவங்கள் நடக்கிறது. கஞ்சா போதை பொருட்களுக்கு இளைஞர்கள், மாணவர்கள் அடிமையாகி உள்ளனர். தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு சீர்கெட்ட மாநிலமாக உள்ளது. புழல் சிறையில் இருந்து கோர்ட்டுக்கு கைதிகளை அழைத்து சென்ற போது, கைதிகள் போலீசை மிரட்டுகிறார்கள். கைதிகளிடம் போலீசார் கெஞ்சுகின்றனர். இந்த ஆட்சியில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை. இதையெல்லாம் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சிறுமிகள், முதியவர்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா. 

திருவள்ளூர் மாவட்டத்தில் 20 நாட்களில் 11 பாலியல் வன்கொடுமைகள் நடந்து உள்ளன. இதனை பெண்கள், பொதுமக்கள் எண்ணி பார்க்க வேண்டும். இது பற்றி கவலைப்படாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தமிழ்நாடு குற்றநாடாக மாறிவிட்டதாக ஒரு பத்திரிகையில் செய்தி வந்து உள்ளது. 

இது மீனவர்கள் நிறைந்த பகுதி, மீன்பிடி தடைக்காலத்தில் அதிக நிதி கொடுத்தது அ.திமுக, அந்த நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும். அ.திமுக ஆட்சியில் டீசல் மானியம் கொடுத்தோம். அதனை உயர்த்தி வழங்குவோம். சிறுபான்மையின மாணவர்கள் 37 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு ரூ.854 கோடி கல்வி உதவி வழங்கி உள்ளோம். சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து உள்ளோம். ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்து பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்துள்ளோம்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கி இருக்கிறார்கள். இதில் வீடு, வீடாக அதிகாரிகள் வருகின்றனர். மக்களுக்கு 46 பிரச்சினை இருப்பது முதல்வருக்கு தற்போதுதான் தெரியவந்து உள்ளது. 50 மாதமாக தீர்க்க முடியாத பிரச்சினையை 8 மாதத்தில் தீ்ரக்க முடியுமா. ஓட்டுக்காக ஸ்டாலின் அரசு நாடகமாடுகிறது. மக்களை திமுக. எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை எண்ணி பார்த்து அதிமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசாக மாறிவிட்டது என்று பேசினார். அப்போது அங்கு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி. சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சரும், மாநில வா்த்தக அணி செயலாளருமான சித. செல்லப்பாண்டியன், பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உள்பட பலர் இருந்தனர். 

இன்று எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திற்கு சென்று மாதாவை வணங்கினார். அப்போது மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் தூத்துக்குடி டிஎஸ்எப் கிரான்ட் பிளாசா ஹாலில் தொழில் முனைவோர்கள், விவசாயிகள், உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள், வழக்கறிஞர்களுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் சே ராஜூ எம்.எல்.ஏ அதிமுக அம்மா பேரவை செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்ல பாண்டியன்,  முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி  தளவாய் சுந்தரம், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னாள் எம்எல்ஏ பி ஜி ராஜேந்திரன், கல்லூர் வேலாயுதம் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் ஆல் இந்தியா சேம்பர் ஆப் காமர்ஸ், இந்தியா சேம்பர் ஆஃப் காமர்ஸ், மற்றும் விவசாய சங்கங்கள் நீர் பாசன அமைப்புகள், வழக்கறிஞர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், வணிகர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள கிளம்பி சென்றார். அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு செல்கிறார்.