தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது .! - ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நடவடிக்கை

srivai police

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது .! - ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நடவடிக்கை

தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகள் இருப்பதால் கள்ளச்சாராயம் காய்ச்சப்படாது என்றுதான் பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு தயாராக வைத்திருந்த சாராய ஊறலை போலீசார் அழித்திருக்கிறார்கள் என்கிற செய்தி, கள்ளச்சாராயமும் காய்ச்சப்படுகிறதா என்று கேட்க தோன்றுகிறது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் தலைமையில் போலீசார் ஆழ்வார்தோப்பு புறவழிச்சாலையில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சில மர்மநபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் திடீரேன காட்டுப்பகுதிக்குள் சென்றனராம். இதனை கண்ட போலீசார், அவர்களை பின் தொடர்ந்து சென்றிருக்கின்றனர். போலீஸ் பின் தொடர்ந்து வருவதை கண்டதும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அப்பகுதியை போலீசார் சோதனை செய்திருக்கிறார்கள். 

அப்போது தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அந்த மர்ம கும்பல் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. மேலும் அங்கு பிளாஸ்டிக் பேரல்களில் சாராய ஊறல்களும் அதிகமான அளவில் வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த போலீசார், சாராய மாதிரியை எடுத்து வைத்துக் கொண்டு சாராய ஊறலை கொட்டி அழித்தனர். அங்கிருந்த கேஸ் அடுப்பு, சிலிண்டர்கள், பேரல்கள், அரிவாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்திருக்கின்றனர். 

இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து சாராயம் காய்ச்சும் மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது தெரியவந்திருக்கிறது.