தாழ்வான பகுதி மக்கள் உடனே நிவாரண முகாமிற்கு செல்ல வேண்டும் - தூத்துக்குடி கலெக்டர் அவசர அறிவிப்பு
Thoothukidi collector
3 முதல் 4 மணி நேரங்களில் 75000 கனஅடி வெள்ள நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றிற்கு வர வாய்ப்புள்ளதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் நிவாரணம் முகாம்களில் தங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அவசர அறிக்கை : தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு நீர்வரத்து 26000 கனஅடியாக உள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் அதிக கனமழை காரணமாக 55000 கனஅடி தண்ணீர் சுத்தமல்லி அணைக்கட்டு பகுதியில் வந்து கொண்டிருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது. மேற்படி 55000 கனஅடி தண்ணீரானது தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்னும் 3 முதல் 4 மணி நேரங்களில் வந்தடைய வாய்ப்புள்ளது. மேலும், இந்த நீரானது திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு வர 5 மணி நேரமாகும் மற்றும் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சித்தாறு பகுதியிலிருந்து 20000 கனஅடியானது வந்தடைய வாய்ப்புள்ளது. ஆக மொத்தம் 75000 கனஅடி வெள்ள நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றிற்கு வர வாய்ப்புள்ளது. எனவே, ஆபத்தான சூழ்நிலை காரணமாக திருவைகுண்டம் வட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளான கலியாவூர், அகரம், முத்தாலங்குறிச்சி, ஆராம்பண்ணை, முறப்பநாடு, கோவில்பத்து, ஆழிக்குடி, பொன்னங்குறிச்சி, ஆழ்வார்தோப்பு, புதுக்குடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுபோல, ஏரல் வட்டத்தில் உள்ள கீழ்பிடாகை கஸ்பா, மங்கலக்குறிச்சி, ஏரல் பேரூராட்சி, உமரிக்காடு, முக்காணி, பழையகாயல், புல்லாவெளி, ஆதிநாதபுரம், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம், கேம்பலாபாத், தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, பால்குளம், இராஜபதி, வாழவல்லான், சேதுக்குவாய்த்தான், குருகாட்டூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களையும் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை கருத்திற்கொண்டு மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு அலுவலர்கள் மூலமாக தாமிரபரணி ஆற்றின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொது மக்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்கவோ, குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்லக்கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து நிவாரணம் முகாம்களில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.