ஏரல் பாலம் வெள்ளத்தில் மூழ்கியதில் போக்குவரத்து முடக்கம் - வாகனங்கள் மாற்று பாதையில் செல்கிறது
Thoothukidi collector
திருநெல்வேலி, தென்காசி,தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்கள் பாதிக்கும் வகையில் மழை பெய்ய கூடும் என்று சமீபத்தில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அரசு நிர்வாகம், வெள்ள பாதிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து தீவிரமாக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்திருந்தார். தற்போது தாழ்வான பகுதியில் வசிப்போர் நிவாரண முகாமிற்கு சென்றுவிடுங்கள் என்று அவசர அறிப்பு வெளியிட்டிருக்கிறார்.
குறிப்பாக ஏரல் வட்டத்தில் உள்ள கீழ்பிடாகை கஸ்பா, மங்கலக்குறிச்சி, ஏரல் பேரூராட்சி, உமரிக்காடு, முக்காணி, பழையகாயல், புல்லாவெளி, ஆதிநாதபுரம், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம், கேம்பலாபாத், தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, பால்குளம், இராஜபதி, வாழவல்லான், சேதுக்குவாய்த்தான், குருகாட்டூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களையும் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை கருத்திற்கொண்டு மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு அலுவலர்கள் மூலமாக தாமிரபரணி ஆற்றின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொது மக்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்கவோ, குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்லக்கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து நிவாரணம் முகாம்களில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார் மாவட்ட கலெக்டர்.
அவர் கூறியுள்ளது போல் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. அதனால் திருவைகுண்டம் அணை முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் வெள்ள நீர் ஏரல் பாலத்தை மூழ்கடித்துள்ளது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. ஏரல் - குரும்பூர் சாலை போக்குவரத்து கட் ஆகிவுள்ளது. வாகனங்கள் அனைத்தும் முக்காணி, ஆத்தூர் வழியாக குரும்பூர் செல்கிறது.
கடந்த வெள்ள காலத்தில் ஏரலில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் அடித்து செல்லப்பட்டது. ஒதுக்கப்பட்டிருந்த பழைய பாலத்தைத்தான் இதுவரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் அதே வெள்ளத்தில் சேதமான ஆத்தூர் புதிய பாலமும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. அங்கும் பழைய பாலமே கை கொடுக்கிறது. அந்த பாலத்தின் வழியாகத்தான் ஏரல் வழித்தட வாகனங்களும் சென்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் வெகு தூரம் சுற்றி செல்கின்றனர்.
ஏரல் - குரும்பூர் சாலையில் செல்ல வருவோர் வேறு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நிலையாகும்.