''எங்களுக்கு ரோடு வேண்டாம் ; ஆர்.ஓ வாட்டர் வேண்டாம்" - தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விநோத மனு

Thoothukudi

''எங்களுக்கு ரோடு வேண்டாம் ; ஆர்.ஓ வாட்டர் வேண்டாம்" - தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விநோத மனு

தூத்துக்குடி:05.01.2026

தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களில், பொதுவாக சாலை வசதி, பேருந்து சேவை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கு மாறாக, “எங்கள் ஊருக்கு சாலை வேண்டாம்; ஆர்.ஓ. குடிநீர் வசதி வேண்டாம்” எனக் கூறி பெண்கள் குழு ஒன்று மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த மனுவில், சாயர்புரம் பேரூராட்சிக்குட்பட்ட சாராக் தெருவில் வசிக்கும் சுமார் 60 குடும்பங்கள், தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை பிரதான வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அந்த தெருவில் புதிதாக சாலை அமைப்பதற்கும், ஆர்.ஓ. குடிநீர் நிலையம் நிறுவுவதற்கும் பேரூராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மேடான நிலையில் உள்ள சாலையின் மீது மேலும் சாலை அமைக்கப்பட்டால், தங்களின் வீடுகள் பள்ளத்தில் அமையும் சூழல் உருவாகும் என்றும், மழைக்காலங்களில் நீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள பைப் லைன் குடிநீர் வசதி தங்களுக்குப் பயன்படாமல், வெளியிலிருந்து வரும் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் புதிய ஆர்.ஓ. திட்டம் தங்களுக்கு தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, சாராக் தெருவில் சாலை மற்றும் குடிநீர் வசதி திட்டங்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட சாயர்புரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்ட போது,“பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சமச்சீர் வளர்ச்சி அடிப்படையில் சாலை மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிக்கும் அதே அடிப்படையில்தான் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. கிராம சபை கூட்டத்தில் அந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் இது. ஆனால் இப்போது சிலர் வேறுமாதிரி நடந்து கொள்கின்றனர். போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பான குடிநீரின் அவசியத்தை உணராமல், சிலர் தவறான புரிதலால் மற்ற சிலரை அழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இது ஒட்டுமொத்த பகுதி மக்களின் கருத்தாக இல்லை”என்று தெரிவித்தார்.

மேலும் அவர்,“சாயர்புரம் பஜார் – கட்டாலங்குளம் இணைப்பு சாலை பணிக்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளது. இந்த சாலை நிறைவேறினால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி, வியாபார வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றம் உறுதியாகும். சிலர் கூறும் காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை. திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் அந்த பகுதி மேலும் பிரகாசமாக மாறும்”என்று கூறினார்.

இந்த விநோத மனு சம்பவம், வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் தெளிவான விளக்கம் மற்றும் ஆலோசனை அவசியம் என்பதை மீண்டும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.