2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும்” – புதுக்கோட்டையில் அமித்ஷா உறுதி
Bjp news
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட “தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்” என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அர்ஜுன் மேக்வால், இணை அமைச்சர் எம்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக–கர்நாடக மாநில மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, தமிழிசை சௌந்திரராஜன், மூத்த தலைவர் எச்.ராஜா, எம்எல்ஏ வானதி சீனிவாசன், பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “தமிழகம் முழுவதும் பயணம் செய்து இந்த விழாவை ஏற்பாடு செய்த நயினார் நாகேந்திரனுக்கு பாராட்டு. இங்கிருந்து உறுதியாக கூறுகிறேன். 2026 ஏப்ரலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி மலரும். தமிழக மக்கள் பிரதமர் மோடியின் தலைமையில் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.
அதிமுக–பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணி என்றும், வரும் நாட்களில் மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். திமுக ஆட்சி ஊழல்களின் அடையாளமாக மாறியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், “குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை மறுத்த அமித்ஷா, ஐஏஎஸ்–ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது, ரயில்வே நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன, காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது, திருக்குறள் 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துக்காட்டினார். மேலும், செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டதையும், தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையும் நினைவூட்டினார்.
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து பேசிய அவர், “2004–2014 காலகட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் கோடி மட்டுமே கிடைத்தது. ஆனால் 2014–2024 காலத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரூ.11 லட்சம் கோடி வழங்கியுள்ளது” என்றார்.
தேசிய அரசியல் நிலவரங்களை குறிப்பிட்ட அமித்ஷா, “2026ல் தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெறும். அதற்காக அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
nadunilai.com