தூத்துக்குடிக்கு சர்வதேச விமானங்கள் - இந்திய விமான நிலைய ஆணைய குழு தலைவர் எம். சுரேஷ் நம்பிக்கை
Airport

சர்வதேச விமானங்கள் தூத்துக்குடிக்கு வந்து செல்லும் காலம் வரும் என்று இந்திய விமான நிலைய ஆணைய குழு தலைவர் எம். சுரேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்திய விமான நிலைய ஆணைய குழு தலைவர் எம். சுரேஷ் இன்று(14.09.2024) ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் சுமார் 80 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்துவிட்டன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முழுமையாக முடிவடைந்து விடும். பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்பு பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
வருங்காலங்களில் சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளில் இருந்து விமானங்கள் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து செல்லும். அதுபோல் வரும் காலத்தில் தூத்துக்குடி விமான நிலையம் இன்டர்நேஷனல் விமான நிலையமாக இயக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் தஞ்சாவூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து, தமிழக அரசு அதற்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு வெளியிட்டவுடன் இந்திய விமான ஆணையம் இணைந்து பரந்தூர் விமான நிலையத்தை நிலையத்தை அமைக்கும் பணியை தொடங்கும். தூத்துக்குடி விமான நிலைய மேம்படுவதற்கு பணப்பற்றாக்குறை எதுவும் இல்லை. பயணிகளின் தேவைக்கற்ப விமான நிலையம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றார்.
பேட்டியின் போது தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் ராஜேஷ், விமான நிலைய மேலாளர் ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.