தூத்துக்குடி மருத்துவர்கள், ஜப்பான் விஞ்ஞானிகள் இணைந்து சோரியாசிஸ் நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு
Medical news
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோரியாசிஸ் நோய்க்கு புதிய மருந்து மூலம் நிரந்தர தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தோல்மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் ததேயுஸ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி :
தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தோல் நோய்க்கு அதிநவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இல்லாத வசதி இங்குள்ளது. சோரியாசிஸ் நோய் என்பது மரபணுக்கள் மூலமாக பரவக்கூடிய தோல் அழற்சி நோயாகும். இந்த நோய் பாதித்தவர்களின் தோல் பகுதியில் செதில் செதிலாகவும், தடித்தும், சிவந்தும் காணப்படும். இது உடல் முழுவதும் பரவினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இது தோல், நகம், மூட்டு ஆகியவற்றை பாதிக்கும். இந்நோய் தீவிரமடைந்தால், உடலில் உள்ள கொழுப்புச்சத்து அதிகரித்து, உடல் எடை கூடும் நிலை ஏற்படும் நிலை ஏற்படும். இதனால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் தடுக்க முடியும். மக்கள்தொகையில் 2 முதல் 3 சதவிகிதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை மாற்றியமைக்கும் அல்லது தீவிரத்தை குறைக்கும் சிகிச்சைகளே நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இதுவரை ஒரு முழு தீர்வு அளிக்கும் சிகிச்சை முறை எட்டப்படவில்லை.
இந்நிலையில் ஜப்பானிய மருத்துவர் குழுவினர் பயன்படுத்தி வரும் நியூ ரீபிக்ஸ் பீட்டா குளுக்கான் என்ற மருந்தை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உள்ளிட்ட சம்பந்தபட்ட குழுவின் அனுமதி பெற்று அந்த மருந்தை வாங்கினோம்., அதனை சோரியாசிஸ் நோயாளிகள் 20 பேருக்கு கொடுத்து சோதனை நடத்தப்பட்டது. இதில், 2 பேர் முற்றிலும் குணமடைந்தனர். 18 பேருக்கு நோயின் தாக்கம் பெருமளவு குறைந்து காணப்பட்டது. இது தொடர்பான அறிக்கை ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற உலக சோரியாசிஸ் மாநாட்டில் பகிறப்பட்டது. அவர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். பக்க விளைவுகள் இல்லாத இந்த சிகிச்சை மூலம் சோரியாசிஸ் நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை பிறந்துள்ளது. இதுகுறித்து விரைவில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டு இதனை நாடுமுழுவதும் பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.எங்களின் இந்த முயற்சிக்கு ஒத்துழைத்த டீன் சிவகுமார் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
அப்போது, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் உடனிருந்தனர்.