சென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் களமிறங்கிய ஈஷா!
isha
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ உதவி வரலாறு காணாத பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஈஷாவின் மருத்துவ குழுவினர் கடந்த ஒரு வாரமாக இலவச மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர். தினமும் 12 முதல் 15 இடங்களில் மருத்துவ முகாம்களை அமைத்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
சமீபத்தில் பெய்த கன மழையால் தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகள், கடைகள் என எல்லா இடங்களிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிப்பு உள்ளாகினர். இந்நிலையில், அவர்களுக்கு உதவும் விதமாக, ஈஷாவின் மருத்துவ குழுவினர் கடந்த 25-ம் தேதி தூத்துக்குடிக்கு சென்றனர். இக்குழுவினர் ஈஷா தன்னார்வலர்களின் பங்களிப்புடன் மாவட்டம் முழுவதும் மருத்துவ சேவை அளித்து வருகிறது.
போக்குவரத்து வசதி இல்லாத தொலைதூர கிராமங்களுக்கும் ஈஷாவின் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இதுவரை 12,000 -க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்றுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
முகாமிற்கு வரும் பெரும்பாலான மக்கள் காய்ச்சல், சளி, இருமல், சேத்துப் புண், தோல் நோய் பிரச்சினைகள், உடல் வலி போன்ற பாதிப்புகளுடன் வருகை தருகின்றனர். அவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதித்து மருந்துகள் வழங்கின்றனர். சில இடங்களில் மருத்துவமனை மற்றும் மருந்து கடைகளில் வெள்ள நீர் புகுந்ததால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கான மாத்திரைகள் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய மருந்துகளையும் ஈஷா மருத்துவ குழுவினர் இலவசமாக வழங்கி வருகின்றனர். இதற்கு முன்பு சென்னை வெள்ள பாதிப்பிலும் ஈஷா மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் உதவியது குறிப்பிடத்தக்கது.