கலப்பட கருப்பட்டியை கண்டுபிடிக்க விரைவில் கருவி வருகிறது - கலெக்டர் தகவல்

kalappada karuppatti

கலப்பட கருப்பட்டியை கண்டுபிடிக்க விரைவில் கருவி வருகிறது - கலெக்டர் தகவல்

கலப்பட கருப்பட்டியை கண்டுபிடிக்க விரைவில் கருவி வர இருக்கிறது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுபதி தகவல் தெரிவித்துள்ளார்.  

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. அப்போது விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை முன்  வைத்தனர். 

அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளை அறிந்து கொண்டு அவைகளை தீர்க்கவும், விவசாயம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவும் விவசாயிகளின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும். நீர் மேலாண்மை, இடு பொருட்கள் கையிருப்பை உறுதி செய்தல், விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க செய்தல் போன்ற பணிகளுக்கு முக்கியத்தும் கொடுத்து செயல்படுத்தப்படும்.

தனிப்பட்ட விவசாயிகள் வாரியாக பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு புரிதல் ஏற்படும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நன்செய் நிலங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் விஷயம் கவனத்துடன் கையாளப்படும். இதில் அரசின் உத்தரவுகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும். சீனி கொண்டு தயாரிக்கப்படும் கலப்பட கருப்பட்டியை கண்டறியும் தொழில்நுட்பம் தற்போது இல்லை.  இது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 3 முதல் 6 மாதங்களுக்குள் அதற்கான தொழில்நுட்பம் வந்துவிடும். அப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.  காட்டுப்பன்றிகளால் பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.