தாமிரபரணி ஆற்றங்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் - கலெக்டர் இளம்பகவத் வேண்டுகோள்
Thoothukidi collector
தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கே இளம்பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடியில் இன்று செய்தியாளருக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
’’தூத்துக்குடி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் மிக கனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், காலையில் இருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாலும், மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம். தாமிரபரணி ஆறு, உப்பாத்து ஓடை, கோரம்பள்ளம் குளம், உப்பாறு ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் மூலம் கண்காணித்திட அனைத்து வட்டாட்சியர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும்பொழுது மக்கள் தங்க வைக்க 97 நிவாரண முகங்கள் தயார் நிலையில் உள்ளன. வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அனைத்து துறைகளும் வெள்ள தடுப்பு பணிகளுக்காக முழு வீச்சில் செயல்பட அறிவுறுத்தப்பட்டு களத்தில் செயல்பட்டு வருகிறது. வெள்ள மீட்பு பணிகளுக்காக தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் உள்ள 41 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 3000 முதல் நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டம் முழுதும் உள்ள 639 குளங்களில் உள்ள நீர் இருப்பு, நீர் வரத்து முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 32 குளங்கள் 70 சதவீதத்திற்கும் மேல் நீர் நிரம்பி உள்ளன. ஒட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள ஒட்டநத்தம் குளம், முரம்பன்குளம் 100% நீர் நிரம்பியுள்ளது. இதிலிருந்து வெளிப்படும் நீர்வரத்து முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.