விபத்தில் சிக்கி 2 நாட்களாக தூத்துக்குடி - நெல்லை சாலையில் தவிக்கும் பசுமாடு - காப்பாற்ற வேண்டும் கால்நடை பராமரிப்புத்துறை

accident

விபத்தில் சிக்கி 2 நாட்களாக தூத்துக்குடி - நெல்லை சாலையில் தவிக்கும் பசுமாடு - காப்பாற்ற வேண்டும் கால்நடை பராமரிப்புத்துறை

மனிதாபிமானம் குறித்து மணிக்கணக்கில் மேடையில் பேசுவார்கள், பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுவார்கள். ஆனால் உண்மையில் தவிப்பதை கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். இது எல்லாருக்கும் பொருந்தாது என்றாலும் 2 நாட்களாக ஒரு பசுமாடு தேசிய நெடுஞ்சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை என்பதால் இப்படி குறிப்பிட வேண்டியது வந்தது. அப்படியானால் அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். இந்த தகவலை உரியவர்களுக்கு கொண்டு செல்லும்பணியில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். 

சாலையில் ஆடு, மாடுகளை விடாதீர்கள், அது வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைத்து விடுகிறது என்று அரசு பல்வேறு காலக்கட்டங்களில் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது. அப்படி சாலையில் சுற்றித்திரியும் ஆடு,மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட கண்டித்திருக்கிறது. ஆனால் உரிமையாளர்களால் ஆடு,மாடுகளை சாலையில் விடாமல் தடுக்கமுடியவில்லை. அப்படி சென்று சாலையில் சிக்கிக் கொண்டால், அதனை எங்களுடையதுதான் என்று சொல்லி அப்புறப்படுத்தவும் முடியவில்லை. 

அப்படித்தான் நேற்று முன் தினம் இரவு(29.12.2023) தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மறவன்மடம் அருகே பசுமாடு ஒன்று வாகனம் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. அது சர்வீஸ் ரோட்டில் விழுந்து கிடக்கிறது. உயிருடன் இருக்கும் அந்த பசு மாட்டினால் எழுந்திருக்க முடியவில்லை. கருப்பு கலரில் இருப்பதால் அது தெரியாமல் வேறு வாகனங்கள் அதன் மீது மோதாமல் இருக்க, யாரோ அந்த மாட்டின் கழுத்தில் மஞ்சள் கலர் துணியை பொருத்தியுள்ளனர். 

கடந்த இரண்டு நாட்களாக அந்த இடத்திலேயே எந்தவித உணவும், தண்ணீரும் இல்லாமல் வெயிலில் கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஐயய்யோ என்று அனுதாபபட்டு செல்கிறார்கள். ஆனால் அந்த மாட்டின் உரிமையாளரோ, தேசிய நெடுஞ்சாலை போலீஸாரோ வந்து அந்த மாட்டினை அப்புறப்படுத்தி காப்பாற்றும் முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. 

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் இருக்கும் மாவட்டத்தில் இப்படியொரு அவலம் இருக்க கூடாது. எனவே அரசு நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை மருத்துவர்கள் வந்து பார்த்து உடனே அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். முதலில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அந்த மாட்டை தூக்கி செல்ல வேண்டும். இரவில் மாட்டின் மீது வேறு வாகனங்கள் மோதி விபத்துக்கள் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. வனவிலங்கு ஆர்வலர்கள், பசு ஆதரவாளர்கள் இதற்கு துணையாக இருக்க வேண்டும். 

உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நம்புவோம்.