கவனிக்க யாரும் இல்லாமல் கண்டபடி இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகள் - நாசரேத்தில் அவலம்
nazareth news
நாசரேத்,மே,10: தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகளை கவனிக்க யாரும் இல்லாததால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கண்டபடி இயக்கப்படுகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாசரேத் பேருந்து நிலையத்திற்கு அரசு நேரக்காப் பாளர் இல்லாத காரணத்தினால் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் நினைத்த நேரத்திற்கு இயங்கும் பேருந்துகளாக மாறி உள்ளன. இதனால் அரசு பேருந்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகளுக்கு முன்னாலே எடுத்துச் செல்வதால் அரசு பேருந்துக்கு வருமானம் இழப்பு ஏற்படுவதுடன் பொதுமக்களும் பேருந்து வசதி இல்லாமல் அதிக கஷ்டப்படுகிறார்கள். தனியார் பேருந்துகள் ஒன்றும் சரியான நேரத்துக்கு இயக்கப்படுவதே கிடையாது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தில் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. ஏற்கனவே நாசரேத் வழித்தடத்தில் மிகக் குறைந்த அரசு பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்துகளும் அட்வான்ஸாக சென்று விடுவதால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகள் அதிக சிரமத்துக்கு ஆளாகிறார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக உடனடியாக நேரக் காப்பாளரை நியமித்து அரசு வருவாயை தக்க வைத்துக் கொள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.